Last Updated : 08 Aug, 2019 04:04 PM

 

Published : 08 Aug 2019 04:04 PM
Last Updated : 08 Aug 2019 04:04 PM

10 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறை: தமிழகத்தில் 24 மணிநேரத்தில் அவலாஞ்சியில் 820 மி.மீ கொட்டித் தீர்த்த மழை: வெதர்மேன் தகவல்

படம் உதவி ஃபேஸ்புக்

சென்னை,

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் நேற்று ஒரேநாளில் 820 மி.மீ மழை கொட்டித்தீர்த்ததுள்ளது, இது தமிழகத்தின் வரலாற்றிலேயே ஒரேநாளில் பெய்த அதிகபட்சம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வடமாநிலங்கள் தென் மாநிலங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், கோவா, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சிமலை ஓரங்களில் இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு பகுதி, குடகுமலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் மிக கனமழையால் கபிணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல கேஆர்எஸ். கிருஷ்ணராஜ சாஹர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை ஓரங்களில் இருக்கும் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, நீலகரி, கோவை, தேனி ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக நீலகிரியில் உள்ள அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 820 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது தமிழக வரலாற்றிலேயே மிக அதிகபட்ச மழைப்பதிவு ஆகும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இந்துதமிழ் திசைக்கு(ஆன்-லைன்) அளித்த பேட்டியில் கூறியதாவது:

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும். குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களில் இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு அதாவது 11-ம் தேதிவரை இருக்கும். அதன்பின்புதான் படிப்படியாக குறையும்.

மேற்குத் தொடர்ச்சி மலை ஓரங்களில் இருக்கும் தமிழக மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, வால்பாறை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 820 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது தமிழகத்தின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக ஒரேநாளில் பெய்த அதிகபட்சமாகும். கடந்த இரு நாட்களில் மட்டும் அவலாஞ்சியில் 1200 மி.மீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான்: கோப்புப்படம்

கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி நீலகிரியின் கேத்திபகுதியில் 820 மி.மீ மழை பெய்தது. அதன்பின் 10 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் 820 மி.மீ மழை பெய்துள்ளது. இதற்கு முன் தமிழகத்தில் 24 மணிநேரத்தில் அதிகபட்சம் பெய்த மழையின் அளவுகளை தந்துள்ளேன். அந்த வகையில்:

1. 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி வந்தவாசியில் 709 மிமீ மழை பெய்ததுதான் மூன்றாவது அதிகபட்சமாகும்.
2. 2008-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி தஞ்சையில் 528 மி.மீ மழை பதிவானது.
3. 1943-ம் ஆண்டு மே 18-ம் தேதி கடலூரில் 572 மி.மீ மழை பதிவானது.
4. 1846-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் 550 மி.மீ மழை பதிவானது.
5. 1970-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் 540 மி.மீ மழை பதிவானது.
6. 1992-ம் ஆண்டு நவம்பரில் தேனி மாவட்டம் மணலாறு பகுதியில் 520 மி.மீ மழை பதிவானது.
7. 1959-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி கோவை மாவட்டம் ஆனைமலையில் 516 மி.மீ மழை பதிவானது.
8. 2005-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 510 மி.மீ மழை பதிவானது.
9. 2007-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் 503 மி.மீ.
10. 1918-ம் ஆண்டு நவம்பரில் வேதாரண்யத்தில் 500 மி.மீ மழை
11. 1981-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி திருச்சி மாவட்டம், பழவிடுதியில் 500 மி.மீ.
12. 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் 494 மி.மீ
13. 2015-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 482 மி.மீ
14. 1969ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 480 மி.மீ.
15. 1917-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தஞ்சை பாபநாசத்தில் 480 மி.மீ.
16. 2007-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் 480 மி.மீ
17. 1991-ம்ஆண்டு நவம்பர் 15-ம் தேதி புதுச்சேரி மாவட்டம் காரைக்காலில் 480 மி.மீ மழை
18. 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 480 மி.மீ
19. 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி திருவண்ணாமலை வெம்பாக்கத்தில் 473 மி.மீ மழை
20. 1846-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் 460 மி.மீ மழை
21. 2007-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 460மி.மீ மழை
22. 1943-ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தில் 457 மி.மீ மழை
23. 1976-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் 452 மழை பதிவானது.

கேரளம், கர்நாடகம், மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சிப் பகுதிகளில் உள்ள வால்பாறை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி தேனி(பெரியாறு அணைப்பகுதி) ஆகிய இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இந்த கனமழை பெய்யக்கூடும். 11-ம் தேதிக்குப்பின் இந்த மழை படிப்படியாக குறையத் தொடங்கும்.

சென்னைக்கு எப்போது மழை?


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 10-ம் தேதிக்கு மேல் வெப்பச் சலன மழை ஒருநாள் விட்டு ஒருநாள் பெய்யத் தொடங்கும். இந்த மழை 10 ம் தேதியில் இருந்து 20-ம் தேதிவரை பெய்யும். பெரும்பாலும் இந்த வெப்பச்சலன மழை மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய மழையாகப் பொழியும். மழை நீர் சேகரிப்பு முறையாக வைத்துள்ளவர்கள், அல்லது இல்லாதவர்கள் இந்த மழையை நன்கு பயன்படுத்தி மழை நீர் சேகரிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

இவ்வாறு வெதர்மேன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x