Published : 24 Jul 2019 04:20 PM
Last Updated : 24 Jul 2019 04:20 PM
மதுரையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்ணை போலீஸார், தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
மதுரை காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவரது மனைவி விஜய பூர்ணிமா (44). டவுன் ஹால் ரோட்டில் இனிப்பகம் நடத்துகிறார்.
இவர் தனது மகன்களான விஜய் ஆகாஷ்(18), அஷ்வின்ராம் (8) ஆகியோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன், சென்னைக்குச் சென்றிருந்தார். நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்கு வந்தனர். அந்த ரயில் இன்று அதிகாலை 4.10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது.
முதலாவது நடைமேடையில் ரயில் நுழைந்தபோது, மதுரையில் இறங்க வேண்டிய பயணிகள் உடைமைகளுடன் தயாராகினர். விஜய் பூர்ணிமாவும் தனது மகன்களுடன் இறங்குவதற்குத் தயாரானார்.
ஆனால், தண்டவாளத்தில் ஓட்டுநர் ரயிலை நிலை நிறுத்துவதற்குள் பூர்ணிமா இறங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரயிலுக்கு அடியில் விழுந்தார். ரயிலில் சிக்கி அவர் அலற அவரது மகன்களும் அலறினர். அதற்குள் ரயில் நின்றுவிட்டது. அதனால் அவர் உயிர் பிழைத்தார்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே போலீஸார், பாதுகாப்புப் படையினர், அதிகாரிகள் விரைந்தனர். போலீஸார் அவரை மீ்ட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சற்று சுணக்கம் ஏற்பட்டதால் உடனடியாக தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
நடை மேடைக்கும் ரயில் பெட்டிக்கும் அடியில் சக்கரத்தின் அருகில் சிக்கிய பூர்ணிமாவை சுமார் 1 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பூர்ணிமாவுக்கு கால், கையில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருந்தன. முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் 1 மணி நேரத்துக்குப் பிறகு அனந்தபுரி ரயில் மதுரையை விட்டு புறப்பட்டுச் சென்றது.
இச்சம்பவத்தையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார், பாதுகாப்புப் படையினர் இன்று துண்டுப் பிரசுரங்களை பயணிகளுக்கு விநியோகித்தனர். பிளாட்பாரத்தில் ரயில்கள் முழுவதுமாக நிறுத்துவதற்குள் பயணிகள் யாரும் இறங்க முயற்சிக்கக் கூடாது என மைக் மூலமும் எச்சரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT