Published : 15 Jul 2019 06:44 AM
Last Updated : 15 Jul 2019 06:44 AM
சென்னை
சென்னையில் பயணிகள், அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று மின்சார ரயில்களின் நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. திருத்தப்பட்ட புதிய அட்டவணை வரும் 17-ம் தேதி அமலுக்கு வருகிறது.
சென்னை கோட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். ஆண்டுதோறும் மின்சார ரயில்களின் கால அட்டவணையில் தேவைக்கேற்ப உரிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு பெரும்பாலான நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை இருக்கும் விதமாக மாற்றம் செய்யப்பட்டு, புதிய கால அட்டவணை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
புதிய கால அட்டவணை குறித்து பயணிகள், ரயில்வே அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. நேர மாற்றம் காரணமாக ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு மின்சார ரயில்களை ஒருங்கிணைத்து இயக்குவதில் தாமதம் ஏற்படுவதோடு, நடைமுறை சிக்கலும் நீடிப்பதாக ரயில்வே அலுவலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ரயில் ஓட்டுநர்கள் சிலர் கூறும்போது, ‘‘மின்சார ரயில் இயக்கத்தில் சென்னை கடற்கரை சந்திப்பு முக்கிய மையமாக இருக்கிறது. சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்ட கால அட்டவணைப்படி, பெரும்பாலான நேரங் களில் 7 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இதனால், கடற்கரை நிலையத்துக்குள் ரயில்கள் வந்து செல்வதில் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது’’ என்றனர்.
இதுபற்றி கேட்டபோது, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறிய தாவது:
மின்சார ரயில்கள் சேவையை முழுமை யாக ஆய்வு செய்த பிறகு, புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. 8 புதிய மின்சார ரயில்களும் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே, அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் 10 அல்லது 12 நிமிடங்களுக்கு ஒரு சேவையும் இயக்கப்பட்டது. அதை மாற்றி, பெரும்பாலான நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு சேவை என இயக்கி வருகிறோம்.
இதுதொடர்பாகவும், புதிய கால அட்டவணையில் மாற்றங்கள் செய்வது குறித்தும் பயணிகள், ரயில்வே அலுவலர் கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் தற் போது சில மாற்றங்களை செய்து, வரும் 17-ம் தேதி முதல் திருத்தப்பட்ட கால அட்டவணை அமல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக, தாம்பரம் தடத்தில் பெரும்பாலான மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை என்பதை 5, 6, 8, 10, 15 நிமிடங்கள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT