Published : 25 Apr 2014 02:57 PM
Last Updated : 25 Apr 2014 02:57 PM

உச்ச நீதிமன்ற முடிவு தமிழர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது: ராமதாஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த தமிழர்கள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இவற்றின் அடிப்படையில் தமிழக அரசு சற்று பொறுப்புடனும், பக்குவமாகவும் செயல்பட்டிருந்தால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், இராபட் பயாஸ் ஆகிய ஏழு தமிழர்களும் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.

மாறாக, தமிழக அரசு பொறுப்பின்றி செயல்பட்டதால் தான் 7 தமிழர்களின் விடுதலை மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.

7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இதற்கான அரசியல் சட்ட அமர்வு 3 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்திற்கு விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கும் நிலையில், அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படுவதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும். அதன்பின் இந்த வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயலும் என்பதால் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக சற்று அதிக காலம் ஆகலாம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் பல மாதங்கள் அவர்கள் சிறையில் வாட வேண்டும் என்பதே மனித உரிமை மீறல் ஆகும். இத்தகைய சூழலில் 7 தமிழர்களுக்கும் உடனடியாக ஏதேனும் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய அவசியமாகும்.

இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் தமிழக அரசின் முன் உள்ளன. இந்த விவகாரத்தின் தமிழக மக்களின் உணர்வுகளை தாம் மிகவும் மதிப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார்.

அது உண்மையாக இருந்தால், குறைந்தபட்ச நிவாரணமாக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக இருட்டுச் சிறையில் வாடும் 7 தமிழர்களும் வெளியுலக சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் வகையில் இவர்களை எவ்வளவு காலத்திற்கு சிறை விடுப்பில் (பரோல்) அனுமதிக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x