Published : 09 Nov 2014 01:19 PM
Last Updated : 09 Nov 2014 01:19 PM

அணைப் பிரச்சினையில் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடவடிக்கை: கருணாநிதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

காவிரி பிரச்சனையை உள்ளடக்கிய பாம்பாறு, பவானி ஆறு போன்ற பிரச்சனைகளில் கேரள அரசு அணை கட்ட மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு மேற்கொள்ளும்" என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு நித்தமும் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வரும் இந்த வேளையில், தமிழக அரசுக்கு எதிராக தினமும் ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பி விடலாம் என்று கருணாநிதி மனப்பால் குடித்து வருகிறார்.

"செயல்படுகிற ஆட்சி சீக்கிரம் வருமா?" என்று தலைப்பிட்டு வரலாற்றையே மாற்றுகின்ற வகையில் முல்லை பெரியாறு அணைப் பிரச்சனைப் பற்றி நீண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.

இந்த அறிக்கைக்கான பொருண்மைகளை கம்பம் ராமகிருஷ்ணனிடம் தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இதனை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் உள்ள பொய்களுக்கெல்லாம் கம்பம் ராமகிருஷ்ணன் தான் பொறுப்பு என்னும் பொருள்பட இந்த அறிக்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விட்டார் கருணாநிதி. பிறர் மீது பழியைச் சுமத்தி அவ்வாறெல்லாம் தப்பித்து விட முடியாது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், திமுகவும் தொடர்ந்து துரோகம் இழைத்ததை மறந்து விடவோ, மன்னித்து விடவோ தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அவரது வழிகாட்டுதலின்படி உச்ச நீதிமன்றத்தின் முன் எடுத்து வைக்கப்பட்ட திறமையான வாதங்களின் அடிப்படையில் தான் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையைப் பலப்படுத்திய பின், 152 அடி வரை உயர்த்துவதற்கு, வல்லுநர்கள் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யவேண்டும் என்றும் 27.2.2006 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, முல்லை பெரியாறு அணையின் முழுநீர்மட்ட அளவு 136 அடி என நிர்ணயிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆணையின்படி, அந்த சட்டத்தினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

முல்லை பெரியாறு வழக்கினை உச்ச நீதிமன்ற அரசியல் சாசனப் பிரிவுக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் முடிவு செய்த போது, அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த மைனாரிட்டி திமுக அரசு அதனை எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தப்பட்ட அதிகாரம் படைத்த குழுவில் தமிழகத்தின் சார்பில் யாரையும் நியமிக்கப் போவதில்லை என்ற நிலையைத் தான் முதலில் திமுக எடுத்தது. அதிகாரம் படைத்த குழுவை ஏற்படுத்தும் முடிவினை திரும்பப் பெற வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த போதிலும், முந்தைய மைனாரிட்டி திமுக அரசு தடுமாற்றத்திலேயே இருந்தது.

ஜெயலலிதாவின் வலியுறுத்தல் காரணமாகவே முந்தைய மைனாரிட்டி திமுக அரசு தமிழகத்தின் சார்பில் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் இலட்சுமணனை நியமிக்கும் நிலை ஏற்பட்டது. முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்த போது, அது பற்றி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டு மைனாரிட்டி திமுக அரசை உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய போது மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என வாதாடியவர் தான் கருணாநிதி. மத்திய அரசு அனுமதி அளித்தது பட்டவர்த்தனமானவுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என வீராப்பு பேசினார். பின்னர், கேரள அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகக் கூட ஆகாமல், ஒன்றுமே இல்லாமல் இந்தப் பிரச்னையை கை கழுவி விட்டார் கருணாநிதி. ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்து ஜெயலலிதா தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

முல்லை பெரியாறு அணை குறித்து Contingency Response என்னும் திட்டத்தை தயாரிப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்படுத்திய போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது ஜெயலலிதா தான். திமுக இதற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவின் எதிர்ப்பு காரணமாகவே மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட்டது.

தமிழர்களின் நலனுக்கு எதிரான 'அணைப் பாதுகாப்பு மசோதா 2010' என்ற சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு அறிமுகம் செய்தபோது, இந்த மசோதாவால் முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதில் திருத்தங்களைக் கொண்டுவர வலியுறுத்தியது ஜெயலலிதாதான்.

2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரம் படைத்த குழுவின் முன் வலுவான வாதங்கள் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி வைக்கப்பட்டன. அதிகாரம் படைத்த குழுவும் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானதுதான் என உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் பின், உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அணையின் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரம் படைத்த குழு அளித்த பரிந்துரைகள் குறித்தும், முல்லை பெரியாறு தொடர்பான கேரள அரசின் சட்டதிருத்தம் செல்லத்தக்கதல்ல என்பது குறித்தும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தமிழக அரசின் எழுத்துப் பூர்வமான வாதமும் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வாறு, ஜெயலலிதா எடுத்த திடமான, உறுதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவற்றின் காரணமாகவே, 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியிலிருந்து 142 அடி என்ற அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டது. இதைப் போன்ற ஒரு மகத்தான தீர்ப்பினை பெற்றதால் தான், 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது. எனவே தான் பல்வேறு விவசாய அமைப்புகளும் மதுரையில் 22.8.2014 அன்று ஒரு விழாவினை நடத்தி ஜெயலலிதாவுக்கு தங்களது பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்தார்கள்.

கருணாநிதிக்கு கண்டனம்

கருணாநிதி தனது அறிக்கையில் விவசாய பெருங்குடி மக்களால் நடத்தப்பட்ட இந்த விழாவை கொச்சைப்படுத்தி இருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்தப்படுவதை மத்திய நீர்க்குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நியமிக்கப்படும் 3 உறுப்பினர்கள் கொண்ட மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் உயர்த்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து, பாரதப் பிரதமரை 3.6.2014 அன்று ஜெயலலிதா நேரில் சந்தித்து அணையின் நீர் மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்துவதற்கு மேற்பார்வைக் குழுவினை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில், மத்திய அரசு, 1.7.2014 அன்று இக்குழுவினை அமைத்தது.

இந்தக் குழுவின் கூட்டத்தினை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஜெயலலிதா மேற்கொண்ட விரைவான நடவடிக்கையின் அடிப்படையில், இக்குழுவின் முதல் கூட்டம் 8.7.2014 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 17.7.2014 அன்று நடைபெறவுள்ள 2-ஆம் கூட்டத்தில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரையில் உயர்த்துவதற்கு முடிவெடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டதற்கிணங்க, அவ்வாறு அக்கூட்டமும் 17.7.2014 அன்று நடைபெற்று, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவினை அடுத்து, ஜெயலலிதா அறிவுரையின் பேரில் 17.7.2014 அன்றே அணையின் மதகுகள் கீழிறக்கப்பட்டன.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 31.10.2014 அன்று மதியம் சுமார் 2.00 மணி அளவில் 136 அடியை எட்டியது. அதன் பிறகு பெரியாறு அணை மற்றும் தேக்கடி பகுதிகளில் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 4.11.2014 அன்று 138 அடி அளவிற்கு உயர்ந்தது. 8.11.2014 அன்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138.40 அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 456 கனஅடியாகவும் இருக்கிறது.

இவ்வாறாக, ஜெயலலிதா அறிவுரைகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால், அணையின் நீர்மட்டம், உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய இந்த ஆண்டே 136 அடிக்கு மேல் நீர் உயர்த்தப்பட்டு, தமிழக விவசாயிகளின் நீண்ட நெடுங்காலக் கனவு நனவாகியதோடு, தமிழ்நாட்டின் உரிமையும் நிலை நாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெரியாறு அணை பாசனம் மற்றும் வைகை அணை பாசனப் பகுதிகளுக்கு நீர் அளிப்பதற்காக அணைகளிலிருந்து நீர் திறந்து விடப்பட்டு வந்தது. வைகை அணையில் 1.11.2014 அன்று 2.4 டி.எம்.சி அடி நீர் மட்டுமே இருந்தது. இது மேலும் குறைந்தது. அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து குறைந்தும், பின்னர் 3.11.2014 முதல் அதிகரித்தும் அதன் பிறகு மீண்டும் குறைந்தும் வந்தது. எனவே, வைகை அணை பாசனதாரர்கள் மற்றும் பெரியாறு அணை பாசனதாரர்கள் ஆகியோருக்கு பாசனத்திற்கு நீர் வழங்குவதற்கு ஏதுவாக, முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

பருவ கால சூழ்நிலைக்கேற்பவும், அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்தைக் கருத்திற் கொண்டும், அணைகளிலிருந்து நீரை உரிய வகையில் பயன்படுத்த ஏதுவாக நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. எனவே, நீர் மேலாண்மை குறித்து குழப்பம் விளைவித்து அரசியல் ஆதாயம் தேட முனையும் கருணாநிதியின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மதுரையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்ததன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கருணாநிதி வினவியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 27.2.2006-ம் நாளிட்ட தீர்ப்பில், தமிழ்நாடு மத்திய நீர்வளக் குழுமம் தெரிவித்தவாறு, கேரள அரசு தெரிவித்த மறுப்பினால் செய்து முடிக்கப்படாமல் உள்ள எஞ்சிய பணிகளை மத்திய நீர்வளக் குழுமத்திற்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் செய்து முடிக்கப்பட்ட பின்னர் தனிப்பட்ட வல்லுநர்கள் ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாமென குறிப்பிட்டுள்ளதையும் மற்றும் அதிகாரம் படைத்த குழு மேலும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதையும் கருத்திற்கொண்டு, நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழுவின் 4-வது கூட்டம் 15.9.2014 அன்று நடைபெற்ற பொழுது அணை பாதுகாப்பு குறித்து, குறிப்பாக அதிகாரம் படைத்த குழு மற்றும் வல்லுநர்கள் குழு அளித்த அறிக்கைகள் உச்ச நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது குறித்தும், அவைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் சார்பில் 142 அடிக்கு மேலாக அணையின் உச்ச நீர் மட்ட அளவான 152 அடி வரையில் நீரை உயர்த்தி வைப்பதற்காக தமிழ்நாடு செய்ய உள்ள வலுப்படுத்தும் பணிகள் பற்றிய விவரங்கள் உறுதிபட தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிந்த பின்னர், கோடை காலத்தில் தான் அணையை பலப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு செய்து முடிக்க இயலும். ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தியே தீரும்.

எனவே, முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகத்திற்கு தொடர் துரோகம் செய்த கருணாநிதி இதைப் பற்றி எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை.

கேரள அரசின் முயற்சி

அமராவதி ஆற்றின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு பட்டிசேரி என்னுமிடத்தில் அணை கட்டப்போவதாக செய்திகள் வந்ததை அடுத்து, தேவையான நடவடிக்கையை இந்த அரசு தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமர் இப்பிரச்சனையில் தலையிட்டு, தமிழக அரசின் இசைவு பெறாமலும், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் பெறாமலும், கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே எந்த

ஒரு அணை கட்டும் பணியினையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்குமாறும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையினை திறம்பட செயல்படுத்துவற்கு ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டி மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டு இந்த வாரியத்தை உடன் அமைக்க கோரியும் பாரதப் பிரதமருக்கு 8.11.2014 அன்று நான் கடிதம் எழுதியுள்ளேன்.

காவிரி பிரச்சனையை உள்ளடக்கிய பாம்பாறு, பவானி ஆறு போன்ற பிரச்சனைகளில் கேரள அரசு அணை கட்ட மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முல்லை பெரியாறு பிரச்சனை தொடர்பாக தமிழக மக்களின், குறிப்பாக 5 மாவட்ட விவசாயிகளின், நலனைப் பாதுகாக்கும் வகையில், உரிமையை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தது ஜெயலலிதாதான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, அறிக்கைகள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை கருணாநிதி உணர்ந்து கொள்ள வேண்டும்.

"பல்லார் முனியப் பயினில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்."

என்ற திருவள்ளுவரின் வாய்மொழியை நினைவில் கொண்டு கருணாநிதி அறிக்கைகள் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x