Published : 01 Nov 2014 11:36 AM
Last Updated : 01 Nov 2014 11:36 AM
தமிழ்நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூரில் ஆட்டோ கட்டணத்தை ஒழுங்குபடுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் என்ற அமைப்பின் செயலாளர் என்.லோகு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயம்புத்தூர் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டண வசூல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை பற்றி அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.25 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக ஒவ்வொரு கி.மீ. தூரத்துக்கும் ரூ.12 வசூலிக்க வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. காத்திருக்கும் நேரத்துக்கு ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.3.50-ம், இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பகல் நேர கட்டணத்தை விட கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
“பெட்ரோலிய எரிபொருள்களின் விலை நிலவரத்துக்கு ஏற்ப 3 மாதத்துக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை அதிகாரிகள் மாற்றியமைக்க வேண்டும். ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பான அறிவிப்பு பயணிகளின் பார்வைக்கு நன்கு தெரியும் விதத்தில் ஆட்டோக்களில் வைக்கப்பட வேண்டும்.
ஆட்டோ கட்டண பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லாத இலவச தொலைபேசி வசதி ஏற்படுத்திட வேண்டும். அந்தப் புகார்கள் தொடர்பாக 2 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கட்டண வசூலில் தொடர்ந்து பலமுறை விதிமுறைகளை மீறி செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறை மீறல்களுக்காக அவர்களின் ஆட்டோவுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை நிறுத்தி வைப்பது அல்லது ரத்து செய்யும் நடவடிக்கைகள் தொடர்பான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை தமிழ்நாடு முழுமைக்கும் அமல்படுத்திட சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT