Published : 10 Nov 2014 08:49 AM
Last Updated : 10 Nov 2014 08:49 AM
திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் ராமலிங்க நகரில் உள்ள சிவானந்தா பாலாலயாவில் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்கிற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு பேரவைத் தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் அசோகன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலபாரதி எம்எல்ஏ பேசியது: இன்று காய்கறிகளை கூட வங்கிகளில் கடன் பெற்று வாங்கும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவரை, மனைவி எப்படி வேறு வழியின்றி ஏற்றுக் கொள்கிறாரோ, அதேபோன்ற நிலையில் மக்கள் இன்று அரசியல் கட்சிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிரச்சினைகளுக்கு காரணம் தெரியாமல் அல்லாடுகின்றனர். இலவசங்களை வாங்கி, கட்சி களை ஆதரிக்கும் மனநிலைக்கு மாறிவிட்டனர். நாட்டில் லஞ்ச லாவண்யம், ஊழல் மலிந்து விட்டது. அரசியல் என்பதே பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முன்பெல்லாம் இரவு நேரங்களில்தான் தயங்கித் தயங்கி வருவார்கள். ஆனால், இப்போது பகலிலேயே வீட்டுக் கதவை தட்டி பணம், அன்பளிப்புகளை கொடுக்கும் நிலை உள்ளது.
இந்த பணத்தை வாங்காதவர்களை பைத்தியக்காரர்களாக, ஏமாளிகளாக பார்க்கும் நிலை இருக்கிறது. சமூக விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே இந்த நிலை மாறும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT