Published : 04 Jul 2017 01:17 PM
Last Updated : 04 Jul 2017 01:17 PM

மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் உடனடியாக கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படும் கடும் எதிர்ப்பையும் மீறி, காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவும், மின் உற்பத்தி மற்றும் நீரேற்று நிலையத் திட்டங்களை நிறைவேற்றவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்து, அதைக் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு முற்றிலும் மாறாகச் செயல்படுத்தத் துடிப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூபாய் 5,912 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு, திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் 25 கோடி ரூபாய் ஒதுக்கிய தொடக்க நிலையிலிருந்தே, தமிழகத்தின் சார்பில் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்றத்தில் 5.12.2014 மற்றும் 27.3.2015 ஆகிய இரு தேதிகளில் ''இந்த அணையை கட்டுவதோ, இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதோ காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எதிரானது. ஆகவே இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசும் இத்திட்டத்திற்கான சுற்றுப்புறச்சூழல் மற்றும் இதர அனுமதிகளை அளிக்கக் கூடாது'' என்று தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வும் கர்நாடக மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் மத்திய அரசும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முயற்சிக்கவில்லை. கர்நாடக மாநில அரசும் இரு மாநில உறவுகளின் நலன் கருதி இதுபோன்ற தன்னிச்சையான திட்டத்தை கைவிடவும் இல்லை.

அதிமுகவிற்கு 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருந்தும், அக்கட்சிக்குள் உள்ள அனைத்து அணிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு பாஜகவை ஆதரிக்கின்ற நிலையிலும் கூட, மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு மத்திய அரசின் மூலம் தடை போட முடியவில்லை.

மாநில அரசின் சார்பில், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் வாதிட்டு, மேகதாது அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திலும் தடையுத்தரவு பெற முடியவில்லை. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்த தீர்ப்பிற்கு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றம் சென்று தடைபெற்ற அதிமுக அரசு, அந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் மேகதாது அணை விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடி உடனடியாக தடையுத்தரவு பெற முடியவில்லை என்பது வருத்தமளிப்பது மட்டுமல்ல, இந்த அரசின் செயலற்ற போக்கை எடுத்துக் காட்டுகிறது.

5.2.2007 அன்று வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலேயே ''தமிழகத்திற்கு இறுதித் தீர்ப்பின்படி வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறையும் வகையில் எந்தத் திட்டங்களையும் கர்நாடக அரசு நிறைவேற்றக் கூடாது'', என்று தெளிவாக கூறப்பட்டு இருக்கிறது. அந்த இறுதித் தீர்ப்பை மீறும் வகையிலும், காவிரி இறுதித் தீர்ப்பின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நேரத்திலும், கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட தன்னிச்சையாக முயற்சிப்பது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற அராஜகச் செயலாகும்.

காவிரி இறுதித் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய தண்ணீரைக் கொடுப்பதற்கே எங்களிடம் தண்ணீர் இல்லை என்று கைவிரிக்கும் கர்நாடக அரசு, 68 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட புதிய அணையை கர்நாடகாவில் கட்டிக் கொள்ள முயற்சிப்பதை தமிழகம் எந்தவிதத்திலும் சகித்துக் கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது. மத்திய அரசும் இதற்கு எந்த வகையிலும் ஒப்புதல் வழங்கக்கூடாது.

ஆகவே, தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகளின் எதிர்காலத்தை இருள்மயமாக்கும் இந்தப் பிரச்சினையில், அதிமுக அரசு வழக்கம் போல் கடிதம் எழுதுவதோடு நின்று விடாமல், உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்.

அக்கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநிலம் கட்ட முயற்சிக்கும் அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்துடன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்து, அவர்களை நசுக்கும் கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x