Published : 01 Jul 2017 08:36 AM
Last Updated : 01 Jul 2017 08:36 AM
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து நேற்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும், அரசு அதிகாரி களை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அப் பகுதி கலவர பகுதியாக மாறியது.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நேற்று ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட கசிவால் அருகில் உள்ள வயலில் பரவியுள்ள கச்சா எண்ணெய்ப் படலம். |
தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ஓஎன்ஜிசி சார்பில் 11 இடங் களில் எண்ணெய்க் கிணறு அமைக் கப்பட்டது. இந்த கிணறுகளில் இருந்து பல நூறு அடி ஆழத்தில் இருந்து உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய், 7 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. கதிரா மங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடி ஆழத் துக்கு ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெய் உறிஞ்சுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிப்பதற்குக்கூட தண் ணீர் கிடைக்கவில்லை எனவும், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தொடர் நடவடிக்கையின் காரணமாக விவ சாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் பொதுமக்கள் புகார் தெரி வித்து போராட்டம் நடத்திவந்தனர்.
வயல்களில் கச்சா எண்ணெய்
இந்நிலையில், கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள ஓஎன்ஜிசி எண் ணெய்க் கிணறு பகுதியில் இருந்து குத்தாலத்துக்கு செல்லும் குழா யில் நேற்று கசிவு ஏற்பட்டு வெளி யேறிய கச்சா எண்ணெய் திறந்த வெளியில் ஓடி, அப்பகுதி வயல் களில் பரவியது. அப்பகுதி முழுவ தும் ரசாயன நெடி வீசியது. இத னால், அச்சமடைந்த கதிராமங்கலம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
கதிராமங்கலத்தில் நேற்று சாலையின் நடுவே தடுப்புக்காக போடப்பட்டிருந்த முட்செடிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், அது கொளுந்துவிட்டு எரிகிறது. |
அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்
தகவலறிந்த ஓஎன்ஜிசி அதிகாரி கள், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் எண் ணெய்க் குழாய் கசிவை சரிசெய்ய கதிராமங்கலம் வந்தபோது, அவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும், எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு செல்லும் சாலையில் கிராம மக்கள் அரண் போல அமர்ந்து, வெளி ஆட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் வந்தபோதும், அவர் களையும் கிராம மக்கள் உள்ளே விட மறுத்தனர். அப்போது, “ஓஎன்ஜிசியால் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறினீர்களே, இப்போது கச்சா எண்ணெய்க் கசிவால் ரசாயன நெடி வீசுகிறது, வயல் பகுதி முழுவதும் எண்ணெய்ப் படலத்தில் மிதக்கிறது. இதனால் பாதிப்பு ஏற்படாதா?” என கிராம மக்கள் ஆவேசமாகக் கேட்டனர்.
கதிராமங்கத்தில் ஓஎன்ஜிசி குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதையடுத்து, அந்த பகுதிக்குள் யாரையும் செல்லவிடாமல் தடுத்து, சாலையில் அமர்ந்துள்ள கிராம மக்கள். |
மேலும், குழாயின் கசிவைச் தடுக்க வந்தால், கச்சா எண் ணெய்யை தீ வைத்துக் கொளுத்து வோம். அதில், நாங்கள் அனை வரும் விழுவோம் எனவும் மிரட்டி னர். அங்கிருந்த பெண்கள் பலரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் கச்சா எண்ணெயை பிடித்து வைத்துக்கொண்டு கூச்சலிட்டனர்.
பின்னர், திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன், முன் னாள் எம்எல்ஏ செ.ராமலிங்கம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலை வர்கள் கோ.ரவிச்சந்திரன், கோ.ஆலயமணி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் அங்கு வந்து, பொது மக்களுக்கு ஆதரவாக அதிகாரி களிடம் பேசினர்.
இதில், “மக்களுக்கு பாதிப் பில்லை எனக் கூறும் மாவட்ட நிர் வாகத்தின் சார்பில், ஆட்சியர் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும், விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு முற்றிலுமாக வெளியேற வேண்டும்” என வலியுறுத்தினர்.
மேலும், ஆட்சியர் வரும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக் கூறி, வன துர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முன் அமர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கதிரா மங்கத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு திருவிடைமருதூர், கும்பகோணம் டிஎஸ்பிக்கள் தலைமையில் ஏராள மான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பிளாஸ்டிக் பாட்டிலில் பிடித்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய். |
முட்செடிகளை கொளுத்தியதால்...
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இடத்துக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்பதற்காக, சாலையில் முள்செடிகளை போட்டு தடுப்பு அமைத்திருந்தனர். அவ்வப்போது, ஓஎன்ஜிசிக்கு எதி ராக முழக்கமிட்டனர். இதற் கிடையே, சாலையில் கிடந்த முட் செடிகளை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியதால், அது கொழுந்து விட்டு எரிந்தது. தீயை அணைப்ப தற்காக போலீஸார் சென்றபோது, பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். ஆத்திரமடைந்த போலீஸார் பொது மக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பெண்கள், பொதுமக்கள் வயல்வெளிப் பகுதியில் நான்கு புறமும் சிதறி ஓடினர். போலீஸார் அவர்களை விரட்டி விரட்டித் தாக்கினர், இதில், பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
பொதுமக்கள் கல்வீசித் தாக்கி யதில், திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கும்ப கோணம் மேற்கு காவல் நிலைய காவலர் செந்தில் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட் டனர். போலீஸார் தடியடி நடத்திய தாலும், பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாலும் கதிராமங் கலம் கலவர பகுதியாக மாறியது.
போலீஸார் தடியடி நடத்தியதால், வயல் பகுதியில் சிதறி ஓடும் பொதுமக்கள். |
பின்னர், ஓஎன்ஜிசி அதிகாரிகள் எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, அங்கு எண் ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு களை சீரமைக்கும் பணியில் ஈடு பட்டனர்.
மத்திய மண்டல ஐஜி முகாம்
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கதிராமங்கலத்தில் மத்திய மண்டல ஐஜி வரதராஜன் முகாமிட்டு, பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT