Published : 29 Jun 2017 09:47 AM
Last Updated : 29 Jun 2017 09:47 AM
ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றங்களைக் குறைக்க நுழைவு வாயில்களை ஒழுங்குபடுத்த வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி, தாம்பரம் செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் என புறநகர் பகுதியில் தினமும் 500-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 8 லட்சம் பேர் தினமும் பயணம் செய்கின்றனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, தாம்பரம், அரக்கோணம், திருவள்ளூர் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான ரயில் நிலையங் களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. சில ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர்கள் இல்லாமல் இருக்கின்றன. பல்வேறு ரயில் நிலையங்களில் அதிகளவில் நுழைவு வாயில்கள் இருப்பதால் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் எளிதில் தப்பித்து விடுகின்றனர்.
சுற்றுச்சுவர், மின்விளக்கு
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரயில்வே துறையிடம் வலியுறுத்தி வருகிறோம். சுற்றுச்சுவர்கள் அமைப்பது, ரயில் நிலையங்களில் மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் நிறுவுவது, ஏற்கெனவே உள்ள சுரங்கப் பாதைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தேவைகளை வலியுறுத்தி வருகிறோம்.
பெரும்பாலான ரயில் நிலையங் களில் அதிக எண்ணிக்கையில் நுழைவு பாதைகள் உள்ளன. இதனால், ரயில் நிலையங்களில் உள்ளே வந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவர்கள் எளிதில் வெளியே சென்றுவிடுகின்றனர். இதனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படு கிறது. எனவே, ரயில் நிலையங் களில் நுழைவுப் பகுதிகளை முறைப்படுத்த வேண்டும். பாதுகாப்புப் பணியை மேம்படுத்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
40 சதவீதம் குறைக்கலாம்
நுழைவு வாயில்களை முறைப்படுத்தினால் ரயில் நிலையங்களில் நடக்கும் மொத்த குற்றங்களில் சுமார் 40 சதவீத குற்றச் செயல்களைத் தடுக்க முடியும். ரயில் பாதையை கடப்பதை தவிர்க்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட நுழைவு வாயில்களில் மட்டுமே மக்கள் செல்ல வேண்டும் போன்ற ரயில்வே துறையின் நடவடிக்கைக்கு ரயில் பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT