Published : 10 Oct 2013 10:07 PM
Last Updated : 10 Oct 2013 10:07 PM
“திராவிடக் கட்சிகளை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பது காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை. அதை நிறைவேற்றியே தீருவோம்” என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், அரக்கோணம், ஆரணி, சேலம், தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்பட 15 தொகுதிகளை தேர்வு செய்து அந்த தொகுதிகளில் பாமகவினர் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.
இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆரணி, அரக்கோணம் ஆகிய 5 தொகுதிகளை சேர்ந்த இளைஞரணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் முழுக்க முழுக்க இளைஞர் சக்தியை நம்பி பா.ம.க. போட்டியிடுகிறது. தனித்து போட்டியிடப் போகிறோம் என்று முடிவெடுத்த உடனேயே கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். இளைஞர்களின் ஆற்றலும், அறிவும் சேரும்போது வெற்றி நிச்சயம்.
திராவிடக் கட்சிகளை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பது காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை. அதை நிறைவேற்றியே தீருவோம். அதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், இளம்பெண்கள் சங்கம் ஆகிய அணிகளில் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் களப்பணி ஆற்ற வேண்டும்.
நமது கட்சியை சேர்ந்த காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. உள்பட 123 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் காடுவெட்டி குருவை தவிர 122 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக டாக்டர் அன்புமணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு கொடுத்து முயற்சிகள் எடுத்தனர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்” என்றார் டாக்டர் ராமதாஸ்.
இக்கூட்டத்தில்,முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, இளைஞர் அணி மாநிலச் செயலாளர் சேலம் அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT