Published : 18 Sep 2013 03:12 PM
Last Updated : 18 Sep 2013 03:12 PM

தாது மணல் கொள்ளை: முதல்வர் நடவடிக்கை மீது ராமதாஸ் சந்தேகம்

தாது மணல் குவாரிகளில் தாமதமாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது, ஆதாரங்களை அழிப்பதற்காகவா? என்று சந்தேகம் எழுவதாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தாது மணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, அதன் அறிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள 71 தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தவும், அதுவரை அந்த குவாரிகளில் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

கிரானைட் கொள்ளையும், தாது மணல் கொள்ளையும் ஒரே மாதிரியான தன்மைகொண்டவைதான் என்றபோதிலும், இந்த இரு பிரச்சினைகளிலும் தமிழக அரசு இரு வகையான அணுகுமுறையை கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கது.

கிரானைட் கொள்ளையை மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் அம்பலப்படுத்தியதும், உடனடியாக மதுரை மாவட்டத்தில் உள்ள 175 குவாரிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அந்த குவாரிகள் மூடி முத்திரையிடப்பட்டன. கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களும் அவர்களுக்கு துணை போன அதிகாரிகளும் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டனர். மொத்தம் ரூ. 4000 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், கிரானைட் கொள்ளையருக்கு சொந்தமான ரூ.9783 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அறிவித்தார்.

ஆனால், கிரானைட் கொள்ளையை விட மிகப் பெரியதாக கருதப்படும் தாது மணல் கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் மிகவும் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல தாது மணல் கொள்ளை நடப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் ஏற்கெனவே இருக்கும் நிலையில், புதிய ஆதாரங்களை கண்டு பிடிப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாது மணல் குவாரிகளில் மட்டும் முதலில் விசாரணை நடத்த முதலமைச்சர் ஆணையிட்டார். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இத்தகைய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தும் அதை தமிழக அரசு ஏற்கவில்லை. அதன்பிறகு ஒரு மாதம் கழித்து இந்த மணல் குவாரிகளில் விசாரணை நடத்த அரசு இப்போது ஆணையிட்டிருப்பதைப் பார்க்கும்போது, தாது மணல் கொள்ளை தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.

முதலமைச்சரின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும், ககன்தீப் சிங் பேடி குழுவின் அறிக்கையில் தாது மணல் கொள்ளைக்கு முதல்கட்ட ஆதாரம் இருந்திருந்தால் தான், இத்தகைய ஆய்வுக்கு அரசு ஆணையிட்டிருக்க முடியும். அப்படியென்றால் ககன்தீப் சிங் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களை தமிழ்நாட்டு மக்கள் அறிந்து கொள்வதற்காக அந்த அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவை உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவற்றுக்கு இணையாக தாது மணல் கொள்ளை ரூ.96 ஆயிரம் கோடி அளவுக்கு நடைபெற்றிருக்கும் என்று இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் ஓராண்டு பட்ஜெட் மதிப்பு அளவுக்கு நடைபெற்றிருக்கும் இந்த கொள்ளை குறித்த அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதிமன்றத்தின் மூலமாக அமைக்கப்படும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை சுதந்திரமாக நடக்கவும், ஆதாரங்கள் கலைக்கப்படுவதை தடுக்கவும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளும் கைது செய்யப்படவேண்டும். கொள்ளையடித்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாது மணல் முழுவதையும் பறிமுதல் செய்ய வேண்டும். தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களை மூடி முத்திரையிடுவதுடன், அந்த நிறுவனங்களின் சொத்துக்களையும் முடக்க வேண்டும். இனியும் தாது மணல் கொள்ளை நடப்பதைத் தடுக்க தாது மணல் குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x