Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து செல்போன் வாங்கிய 2 இன்ஜினியர்கள் கைது

ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து செல்போன் வாங்கிய 2 இன்ஜினியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அருகே எர்ணாவூர் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் விற்பனைக்கு உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் செய்தார். ஒருவர் போனில் கார்த்திகேயனைத் தொடர்பு கொண்டு, எங்கு வந்து செல்போனை வாங்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன், எண்ணூர் மேம்பாலத்தில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு செல்போனை வாங்கிச் செல்லுமாறு கூறினார்.

மேம்பாலத்தில் காத்திருந்த கார்த்திகேயனிடம், ஒரு இளைஞர் தனது மனைவியுடன் வந்து ரூ.18 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு செல்போனை வாங்கிச் சென்றார். வீட்டுக்கு வந்தபின் கார்த்திகேயன் பணத்தை நிதானமாக எண்ணிப் பார்த்தார். அதில் ரூ.800 மட்டும்தான் நல்ல நோட்டுகள். மீதமிருந்த ரூ.17,200 கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்பது தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன், இதுகுறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கார்த்திகேயனிடம் பேசிய நபரின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தனர். அது ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, செல்போனை வாங்கியது தனது நண்பர் சரத்குமாரும், அவரது மனைவியும்தான் என்று கூறினார். ‘‘நானும் சரத்குமாரும் நண்பர்கள். இருவரும் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துவிட்டு அம்பத்தூர் எஸ்டேட்டில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளோம். அந்தக் கடையில்தான் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்தோம்’’ என்றார். இதையடுத்து மணிகண்டன், சரத்குமார் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x