Published : 05 Nov 2013 09:40 AM
Last Updated : 05 Nov 2013 09:40 AM
அதிகவேக லிப்ட்டுடன் தயாராகிறது மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம். 19 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 14-ந் தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படுகிறது.
அதிகவேக லிப்ட்டு
ரூ.1 கோடி செலவில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்தைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய லிப்டுக்குப் பதிலாக புதிய லிப்ட்டு பொருத்தப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தின் 10 மாடி யில் 9-வது மாடி வரை லிப்ட்டு இயக்கப்படுகிறது. இந்த 9 மாடிகளை புதிய லிப்ட்டு 23 வினாடி களிலேயே சென்றடைகிறது. பழைய லிப்ட்டு 56 வினாடிகளில் சென்றது குறிப்பிடத்தக்கது.
புதிய லிப்ட்டில், லிப்ட்டு ஆபரேட்டர் உள்பட 13 பேர் செல்ல லாம். லிப்ட்டில் 9-வது மாடி வரை செல்ல முடிகிறது. அதன்பிறகு 25 படிக்கட்டுகள் ஏறிப்போய், 10-வது மாடியில் இருந்து சென்னையின் அழகை பருந்துப் பார்வையில் பார்த்து மகிழலாம். வங்கக் கடலின் எழில்மிகு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம்.
பல்வேறு வசதிகள்
புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சாய்தள பாதைகளும், 20 கண்காணிப்புக் கேமராக்களும், டோர் மெட்டல் டிடெக்டரும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கழிப்பறைகள் புதுப்பிக்கப் பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி களுக்காக தற்காலிக கழிப்பறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. கலங்கரை விளக்கத்தைச் சுற்றி லும் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.
புதிய அருங்காட்சியகம்
கலங்கரை விளக்கத்தின் பிரமாண்டமான மின்விளக்கை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அதனால், அதுபோன்ற பிரமாண்டமான விளக்குடன்கூடிய புதிய அருங் காட்சியகம், கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு அந்தக் காலத்தில் எப்படி இயக்கப்பட்டது? இப்போது அதிநவீன தொழில்நுட்பத்தில் எப்படி இயக்கப்படுகிறது? போன்ற வற்றை விவரிக்கும் வகையில் புகைப்படங்கள் விளக்க உரையுடன் இடம்பெறுகிறது.
கப்பல் மாதிரி ஒன்றும் வைக்கப் படுகிறது. அந்தக் காலத்தில் துறைமுகத்தின் செயல்பாடுகள், தற்போதைய செயல்பாடுகள் ஆகியன புகைப்படங்களாக அருங் காட்சியகத்தில் வைக்கப்படு கிறது.
படிக்கட்டிலும் ஏறிப்போகலாம்
கலங்கரை விளக்கத்தின் 10-வது மாடிக்கு லிப்ட்டு மட்டுமல்லாமல் 242 படிக்கட்டுகளில் ஏறிச் சென்றும் சென்னை அழகை ரசிக்கலாம்.
இந்த அருங்காட்சியகம், பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் கடல்சார் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மரக்காணத்தில் புதிய...
மரக்காணத்தில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கலங்கரை விளக்கம் வரும் 30-ம் தேதி திறந்துவைக்கப்படு கிறது. தமிழகத்தில் 24 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. 25-வது கலங்கரை விளக்கமாக மரக் காணம் கலங்கரை விளக்கம் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT