Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த குட்வின்

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் பல அற்புதமான சொற்பொழிவுகளை உலகம் அறியச் செய்தவர் ஒரு ஆங்கிலேயர்.

1870-ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர் ஜோஸ்வா குட்வின். இவர் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்கும் வரை குறிக்கோள் இல்லாமல் தனது 14-வது வயதில் எழுத்தாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 1895-ல் சுவாமி விவேகானந்தரின் உரையைப் பதிவு செய்ய ஸ்டேனோகிராபர் தேவை என நியூயார்க் தினசரி பத்திரிகையில் சிறிய விளம்பரம் செய்யப்பட்டது. அதைப் பார்த்து விண்ணப்பித்து பணியில் சேர்ந்தார். முதலில் சம்பளத்துக்குப் பணியில் சேர்ந்த குட்வின், பின்னர் விவேகானந்தரின் உரையைக் கேட்டு சம்பளம் வாங்க மறுத்து விட்டார். சுவாமி விவேகானந்தர் ஆன்மிகத்துக்காக தன்னையே அர்ப்பணித்துள்ள நிலையில் நான் எனது சேவையை அவருடைய பணிக்காக அர்ப்பணிக்கிறேன் என்றார்.

இவர் 1837-ல் இங்கிலாந்தில் அறிமுகமான நியூபிட்மன் முறையில் (சுருக்கெழுத்து) தனித்துவம் பெற்று விளங்கினார்.

ஜம்மு, லாகூர் போன்ற இடங்களில் விவேகானந்தரின் சொற்பொழிவுகளை பதிவு செய்தார். பின்னர் சுவாமி விவேகானந்தர் ஜப்பானில் சொற்பொழிவுக்குச் செல்ல சென்னை வந்தார். அப்போது குட்வினிடம் ஜப்பான் பயணத்தின்போது மீண்டும் சந்திக்கலாம் என்றார். ஆனால் அதன்பின் இருவரும் சந்திக்கவே இல்லை.

சென்னைக்கு வந்த குட்வின், சகோதரி நிவேதிதாவுடன் ஆன்மிகப் பணியை தொடர்ந்தார். சென்னையில் அதிகமான வெயில் காரணமாக குளிர் பிரதேசமான உதகைக்கு வந்தார். உதகையில் நிலவிய கடுமையான குளிரின் தாக்கத்தால் குட்வின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. கடும் நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் 1898 ஜுன் மாதத்தில் தனது 28-வது வயதில் காலமானார். இவரது உடல் உதகை தாமஸ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

குட்வின் நினைவாக 1967-ல் உதகையில் உள்ள தாமஸ் தேவாலயத்தில் உள்ள கல்லறையில் நினைவு தூண் அமைக்கப்பட்டது. நினைவு தூணின் நான்கு புறமும் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள் எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தரின் பிறந்த தினத்தன்று குட்வின் கல்லறையில் ராமகிருஷ்ண மடத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

சுவாமி விவேகானந்தரின் பல அற்புதமான சொற்பொழிவுகளை உலகுக்கு அறிய செய்தவர் குட்வின் என்கிறார் மத நல்லிணக்கக் குழு தலைவர் கிருஷ்ணன். அவர் கூறுகையில், ‘சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை குட்வின் பதிவு செய்ததால்தான், இன்றுவரை அந்த சொற்பொழிவுகளை நாம் கேட்கவும், படிக்கவும் முடிகிறது. சுவாமியின் சொற்பொழிவுகள் குட்வினால்தான் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது’ என்றார்.

வரும் 15-ம் தேதி குட்வின் கல்லறையில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் தியான நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது என்றார் உதகை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ராகவேஷானந்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x