Last Updated : 03 Dec, 2013 10:50 AM

 

Published : 03 Dec 2013 10:50 AM
Last Updated : 03 Dec 2013 10:50 AM

பொங்கலன்று மது விற்பனை கிடையாது

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது மதுபான விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக, டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகை தினங்களில் வழக்கத்தை விட தினசரி ரூ.20 முதல் ரூ.50 கோடி வரை அதிக வருமானம் கிடைக்கும்.

ஆனால், இந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று (ஜனவரி 14), மீலாது நபி பண்டிகையும் சேர்ந்து வருகிறது.

இஸ்லாமியர்களின் புனித நாளான அந்நாளில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை தினமாகும். இதனால் அன்று நடைபெறும் கூடுதல் விற்பனை மூலம் கிடைக்கக் கூடிய வருவாய் கிடைக்காது. அதுபோல், மறுநாளான திருவள்ளுவர் தினத்தன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை நாளாகும்.

இதுமட்டுமின்றி, காணும் பொங்கல் பண்டிகைக்கு மறு நாளான ஜனவரி 17-ம் தேதி, தைப்பூச தினத்தன்று, வள்ளலார் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை தினமாகும். இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது விற்பனை பாதிக்கும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக பொங்கல் பண்டிகைக் காலத்தில் ரூ.100 கோடி அளவுக்கு கூடுதல் விற்பனை நடக்கும்.

கடந்த ஆண்டு மீலாது நபி (ஜனவரி 25), குடியரசு தினம் மற்றும் வள்ளலார் தினம் (ஜனவரி 27) ஆகிய 3 நாள்களும் தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது

டாஸ்மாக் கடைகளை எக்காரணம் கொண்டும் இடமாற்றம் செய்யக்கூடாது என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தா.சவுண்டையா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து கடைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வரும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாக தலைமை அலுவலகத்துக்கு தகவல் வரப்பெற்றுள்ளது. இதனால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும், அவப்பெயரும் ஏற்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் எக்காரணத்தைக் கொண்டும் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x