Published : 16 Sep 2013 01:53 AM
Last Updated : 16 Sep 2013 01:53 AM

24 ஆண்டுகளாக இரட்டை குவளை முறை... முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல மக்கள் கோரிக்கை!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் இரட்டை குவளை முறை கடைபிடிக்கப்படுவதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இது, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டால்தான் நடவடிக்கை வரும் என்று தொகுதி மக்கள் நம்புகிறார்கள்.

திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாநகராட்சி எல்லையிலிருந்து இரண்டு கிலோ மீட்டரில் உள்ளது நவலூர் குட்டப்பட்டு. ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக் கிறார்கள். இதனால் ஊருக்குள் இவர்கள் வைத்ததுதான் சட்டம்.

இந்த ஊரில் ’சேட்டு டீக்கடை’ மிகப் பிரபலம். இதன் சொந்தக் காரரான வெங்கடாஜலம் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் மேலாக டீ ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இவரது கடையில்தான் காலம் காலமாக இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப்படுவதாக புகார் வாசிக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சேட்டு டீ கடையில், தலித் மக்களுக்கு அலுமினியம் டம்ளரிலும் மற்றவர்களுக்கு எவர்சில்வர் டம்ளரிலும் டீ கொடுத்தார்களாம். இப்போது தலித்களுக்கு கண்ணாடி டம்ளரிலும் மற்றவர்களுக்கு எவர்சில்வர் டம்ளரிலும் டீ, காபி கொடுக்கிறார்கள்.

விஷயம் கேள்விப்பட்டு நாம் அங்கு போனபோது கூட, இரட்டை டம்ளர் சிஸ்டம் இருப்பதைக் கண்கூடாகவே பார்த்தோம். ஏன் இந்த வேறுபாடு? என்று கடை வெங்கடாசலத்திடம் பேச்சுக் கொடுத்தோம். நம்மை ஏற இறங்கப் பார்த்தவர், ’’ஊருக்குள்ள நிறையப் பேரு சபரிமலைக்கு போறவங்க. அதனால, அவங்களுக்கு தனியா எவர்சில்வர் டம்ளர்ல டீ தர்றோம்’’ என்று சொன்னார்.

அந்தக் கடையில் எவர்சில்வர் டம்ளரில் டீ அருந்திவிட்டுச் சென்ற சிலரிடம் நாம் பேச்சுக்கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் யாருமே சபரிமலைக்கு போவதாக சொல்லவில்லை. கண்ணாடி டம்ளரில் டீ குடித்துக் கொண்டிருந்த சிலரிடம் பேசியபோது, ’’இந்தக் கொடுமை இங்கே காலம் காலமா நடக்குதுங்க. நாங்க மட்டும் தனியா வந்து டீ குடிக்கிறப்ப இப்படி செஞ்சாக் கூட பரவாயில்லைங்க, வெளியூருல இருந்து நண்பர்கள் வரும்போது அவங்களை அழைச்சுகிட்டு டீ கடைக்கு போனா, அப்பவும் தனி டம்ளரில் டீ குடுத்து எங்கள அசிங்கப்படுத்துறாங்க. அந்த நேரத்துல எங்களோட வந்திருக்கிற நண்பர்கள் எங்கள ஒரு மாதிரியா பாக்குறப்ப அவமானமாவும் கேவலமாவும் இருக்கும். என்ன பண்ணச் சொல்றீங்க. எங்காளுங்களுக்குள்ள ஒத்துமை இல்லாததால எதிர்த்துக் கேக்க முடியல; எல்லாத்தையும் சகிச்சுக்க வேண்டி இருக்கு’’ என்று புலம்பினார்கள். இவர்களிலேயே ஒரு பிரிவினர், ’’எங்கள அவங்க வேத்துமையா பாக்குறதால நாங்க அந்தக் கடை பக்கமே போறதில்லைங்க” என்கிறார்கள்.

இங்கே அவங்க மட்டும் தான் பஞ்சாயத்து தலைவரா வரமுடியும் எங்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முந்தியே ஊர்க் கூட்டம் போட்டு அவர்களே ஒரு வரை தலைவராக தேர்ந்தெடுத்துக்குவாங்க. எங்க தரப்பில் சூர்யாங்கிற தம்பி இந்த கொடுமைகளை எதிர்த்து இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டார். அவரால ஜெயிக்க முடியல. கடைசியில், அவர் மர்மமான முறையில செத்துப் போயிட்டாரு. நாங்க எல்லாரும் விவசாய கூலிகளா இருக்கதால அவங்கள நம்பித்தான் பிழைக்க வேண்டி இருக்கு. சம உரிமை கேட்டால் வேலைக்கு கூப்பிட மாட்டாங்காங்கிறதாலயும் எல்லாத்தையும் சகிச்சுக்க பழகிக்கிட்டோம்.

’தலித் ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அல்லது உணர்வுகளை புண்படுத்தும்விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்1989 பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம். இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்கிறார் திருச்சியின் பிரபல வழக்குரைஞர் மார்ட்டின்.

சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் தொகுதியில் இப்படியொரு அவலம் இருப்பது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்திருக்கிறோம். முதல்வர் கவனத்துக்கு அவர் எடுத்துச் செல்லப்படலாம் என்று நம்பிக் காத்திருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x