Published : 01 Dec 2013 06:03 PM
Last Updated : 01 Dec 2013 06:03 PM
சென்னையில் கார் ஓட்டுபவர்களும், முன்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படுவது, டிசம்பர் 9-ல் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
டெல்லி போன்ற நகரங்களில் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையிலும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரமாக சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நூறு இடங்களில் தலா 20 ஆயிரம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்துள்ளனர். நூறு இடங்களில் விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 2-ம் தேதிக்கு பின்னர் சீட் பெல்ட் அணியமால் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கால அவகாசத்தை வருகிற 8-ம் தேதி வரை நீட்டித்து போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
9-ம் தேதி முதல் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதற்காக 50 பேர் கொண்டு கண்காணிப்பு குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று போக்குவரத்து காவல் இணை ஆணையர் அருண் தெரிவித்தார்.
முதல்முறை சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT