Published : 25 Jun 2017 10:29 AM
Last Updated : 25 Jun 2017 10:29 AM
“கிண்டி தேசியப் பூங்காவில் வாழும் மிகவும் அரிதான புல்வாய் (Black bucks) வகை மான்களின் உணவிடமாகவும், இனப்பெருக்கப் பகுதியாகவும் விளங்கி வருகிறது”
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆளுனர் மாளிகை வளாகத்தை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என்ற தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவின் அறிவிப்பு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே மக்கள் வசதிக்காக என்ற பெயரில் ஆளுனர் மாளிகை தயாரித்துள்ள திட்டம் கிண்டி தேசியப் பூங்காவில் வாழும் அரிய வகை மான்களுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னையில் ஆளுனர் மாளிகை பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. மத்தியக் கைலாஷ் முதல் சென்னை அண்ணா சாலை வரை நீண்டிருந்த ஆளுனர் மாளிகை வளாகம் அடர்ந்த மரங்களைக் கொண்டிருப்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு சென்னை ஐ.ஐ.டி, கிண்டி சிறுவர் பூங்கா, ராஜாஜி நினைவிடம், காமராசர் நினைவிடம், கிண்டி தேசியப் பூங்கா ஆகியவற்றுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 156.14 ஏக்கரில் ஆளுனர் மாளிகை செயல்பட்டு வருகிறது.
இவ்வளவு பரப்பளவு கொண்ட ஆளுனர் மாளிகையில் 30 ஏக்கர் பரப்பளவில் போலோ விளையாட்டுத் திடல் அமைந்திருக்கிறது. ஆளுனர் மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக போலோ திடலில் அடிக்கடி போலோ போட்டிகளை நடத்தி, அவற்றைக் பார்வையிட பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆளுனர் மாளிகையிலிருந்து தமிழக அரசுக்கு அண்மையில் அனுப்பப்பட்டுள்ள பரிந்துரை தான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளுனர் மாளிகை வளாகத்தில் போலோ விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, அவற்றைப் பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கும் திட்டம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு வரவேற்கத்தக்கதாகவே தோன்றும். ஆனால், இதுகுறித்த முழு உண்மைகளையும் அறிந்தால் தான் இது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது புரியும். 30 ஏக்கரில் போலோ விளையாட்டுத் திடல் அமைந்திருந்தாலும், அது பயன்படுத்தப்படாத ஒன்றாகவே இருந்து வந்தது. அதுமட்டுமின்றி கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த போலோ விளையாட்டுத் திடல் தான் கிண்டி தேசியப் பூங்காவில் வாழும் மிகவும் அரிதான புல்வாய் (Black bucks) வகை மான்களின் உணவிடமாகவும், இனப்பெருக்கப் பகுதியாகவும் விளங்கி வருகிறது. இந்தத் திடலில் போலோ போட்டிகளை நடத்தத் தொடங்கினால் புல்வாய் வகை மான்களின் இனப்பெருக்கம் தடைப்படக்கூடும். இவை தவிர புள்ளி மான், வெள்ளை மான், கீரி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் பாதிக்கப்படும்.
ஆளுனர் மாளிகை மற்றும் கிண்டி தேசியப் பூங்காவில் விலங்குகள் நடமாடுவதற்கான பரப்பு குறைந்து விட்டதால் பல நேரங்களில் மான்கள் அடையாறு வழியாக ஈக்காட்டுத் தாங்கல் வரை வந்து செல்கின்றன. பாதுகாக்கப்படாத அந்த பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை உட்கொண்டும், விபத்தில் சிக்கியும் மான்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. போலோ விளையாட்டுத் திடல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டால் மான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கிண்டி தேசியப் பூங்காவிலிருந்து வெளியேறி அழிவைச் சந்திக்கும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளன. இதையெல்லாம் சிந்திக்காமல் இப்படி ஒரு பரிந்துரையை ஆளுனர் மாளிகை அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக ஆளுனரின் செயலர் ரமேஷ் சந்த் மீனா தான் இப்பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது ஆளுனர் வித்யாசாகர் ராவின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. இதற்கு முன் கடந்த 2013&ஆம் ஆண்டு தமிழக ஆளுனராக ரோசய்யா இருந்த போது, இதே போலோ விளையாட்டுத் திடலில் உலங்கு ஊர்தி இறங்கு தளம் (ஹெலிப்பேட்) அமைக்க ரமேஷ் சந்த் மீனா முயற்சி செய்தார். ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து மிகக்கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து உலங்கு ஊர்தி இறங்கு தளம் திட்டம் அப்போது கைவிடப்பட்டது. இப்போது வேறு பெயரில் ஆளுனர் மாளிகையின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மற்ற மாநகரங்களை விட சென்னைக்கு அதிகமாக உள்ளது. சென்னையின் பசுமைப் போர்வை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் 10,000 ஏக்கர் பரப்பளவிலான தோட்டங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் ஒவ்வொரு தனிநபருக்கும் 0.05 மரங்கள் மட்டுமே உள்ளன. சென்னையின் பசுமைப் போர்வைக்கு ஆதாரமாக திகழ்பவை ஆளுனர் மாளிகையிலிருந்து தொடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தான். பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை அழித்தது போன்று பாதுகாக்கப்பட்ட வனத்தையும் அரசே அழித்து விடக்கூடாது. எனவே, போலோ திடலை திறந்து விடும் திட்டத்தை கைவிட்டு, அங்குள்ள வன வளத்தை பாதுகாக்கும் வகையில் ஏதேனும் திட்டத்தை ஆளுனர் மாளிகை செயல்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT