Published : 06 Oct 2013 12:51 PM Last Updated : 06 Oct 2013 12:51 PM
நாட்டுக்காக எதையும் தாங்குவோம்: புத்தூர் மோதலில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் லட்சுமணனின் அண்ணன்
புத்தூர் அருகே தீவிரவாதிகளால் சரமாரியாக வெட்டப்பட்ட காவல்துறை ஆய்வாளார் லட்சுமணன் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்.
அவர் எப்போது குணமடைவார் என்று அவரது குடும்பம் கண்ணீர் வடித்து காத்திருக்கிறது.
ஆய்வாளர் லட்சுமணனின் திறமையையும், நேர்மையும் காவல்துறை பணியில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடம். ஆய்வாளர் லட்சுமணனின் சொந்த ஊர் சென்னை. மனைவியின் பெயர் மதுபென் காந்தி. ஐஸ்வர்யா, சுபாஷினி என இரண்டு மகள்கள்.
1996ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக காவல் துறை பணிக்கு வந்த லட்சுமணன், 2006 ஆம் ஆண்டு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். 6 அடிக்கு மேல் உயரம், காவல் துறைக்கே துறைக்கே உள்ள கம்பீர தோற்றம், யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மை என ஒரு சிறந்த காவல்துறை அதிகாரியாக அவர் பணியாற்றியுள்ளார். 2007ம் ஆண்டு சென்னையில் வடக்கு கடற்கரை காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றியபோது பர்மா பஜாரில் திருட்டு விசிடி பறிமுதல், வெளிநாட்டு மதுபான பறிமுதல், வடசென்னை ரவுடிகளின் கொட்டத்தை ஒழித்தல் என துடிப்புடன் செயல்பட்டார்.
பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் ரவுடிகளை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து காலை உடைத்து அனுப்புவது இவரது ஸ்டைலாக இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சென்னைக்குள் காவல்துறை தலைவர் அலுவலத்தில் பணிக்கு வந்தார் லட்சுமணன். எஸ்.ஐ.யு என்று சொல்லப்படும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில், தீவிரவாத தடுப்பு ஆய்வாளாராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
சிறப்பு புலனாய்வுப் பிரிவின் ஐ.ஜி-யாக இருக்கும் மகேஷ்குமார் அகர்வால், பூக்கடை துணை ஆணையராக இருந்தபோது, ஆய்வாளர் லட்சுமணனின் திறமையை பார்த்து வியந்துள்ளார். மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி யாக பதவியேற்றதும், தனக்கான அணியில் லட்சுமணனை சேர்த்தார்.
இந்த சிறப்பு புலனாய்வுப் பிரிவில் சேர்ந்த சில மாதங்களிலேயே தீவிரவாதிகளின் பயிற்சிமுறை, திட்டமிடல் போன்ற தகவல்களை விரல் நுனியில் சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார் லட்சுமணன். சனிக்கிழமை அதிகாலை பால்காரர் போல் தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டுக் கதவை தட்டி குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் சுதாரிப்பதற்குள் தீவிரவாதிகள் அவரை உள்ளே இழுத்து வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்தவர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார்.
காவல்துறையில் உதவி ஆய்வாளராக உள்ள லட்சுமணனின் அண்ணன் டில்லிபாபு, இதுபற்றி நம்மிடம் கூறுகையில், "மருத்துவமனையில்தான் இருக்கேன் சார். இப்பதான் ரெண்டு வார்த்தை பேசினான். கண்டிப்பா என் தம்பி உயிர் பொழைச்சிருவான். காவல்துறைல வேலைக்கு சேர்ந்து சாதிக்கணும்னு நினைக்கிற குடும்பம் நாங்க. நாட்டுக்காக எதையும் தாங்குவோம்" என்று குடும்ப துன்பத்தை இரண்டாவதாக ஒதுக்கிவிட்டு, பணியின் மேல் பாசத்தை முதலாவதாகக் காட்டினார்.
WRITE A COMMENT