Published : 13 Dec 2013 03:34 PM
Last Updated : 13 Dec 2013 03:34 PM

விசாரணைக் கைதி மரணங்கள்: போலீஸுக்கு முதல்வர் அறிவுரை

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழப்பது, நீதியையே கேலிக்கூத்தாக்கிவிடும் என்று காவல் துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றது.

இதில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, "சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது காவல் துறையினரின் பொறுப்பு. குற்றங்களை தடுத்தல், குற்றங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு, பேரழிவு நிர்வாகம் மற்றும் பலவிதமான சமூக சட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவை காவல் துறையினரின் பொறுப்பு.

தமிழக காவல் துறையை பொறுத்தவரையில் சவால்களை சந்திக்கும் வகையில் சுதந்திரமாக செயல்படும் அதிகாரத்தை எனது அரசு வழங்கியுள்ளது. அண்மையில் பக்ருதீனும், இரண்டு கூட்டாளிகளும் புத்தூர் அருகே நடந்த வேட்டையில் எத்தகைய உயிரிழப்பும் இன்றி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நானே தனிப்பட்ட முறையில் 260 காவல் துறையினருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் முதல் ரூ.15 லட்சம் வரை ரொக்கப் பரிசும், 20 பேருக்கு பதவி உயர்வும் அளித்திருக்கிறேன்.

இதுபோன்ற பரபரப்புமிக்க நடவடிக்கைகள் பத்திரிகைகளில் பிரதான செய்தியாக இடம்பெறுகின்றன. அதே சமயத்தில் அச்சுறுத்தலுக்கு ஆளான முக்கிய பிரமுகர்கள் வருகையின்போதும், சாதி தலைவர்களின் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள், முக்கிய கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றின்போது காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, அவை அமைதியாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்பதை நான் அறிவேன். இதில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களை நான் அறிவேன். இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு காவலர் மட்டுமின்றி காவல் துறையைச் சேர்ந்த காவல்படையின் நலனில் நான் அக்கறை காட்டி வருகின்றேன்.

இந்த நேரத்தில் எனது முன்னுரிமை குறித்து உங்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன். நீங்கள் 9 லட்சம் பேரை கைது செய்யும்போது, போலீஸ் காவலில் ஒருவர் இறந்தால் புள்ளி விவரத்தின்படி அது சாதாரணமானதுதான். ஆனால், இறந்தவரின் குடும்பத்துக்கு அவர் வெறும் புள்ளி விவரம் அல்ல. காவல் நிலையங்களில் சில கைதுகள் திடீரென உடல் நலம் குன்றிப் போவதும், போலீஸ் காவலில் சிலர் தற்கொலை செய்துகொள்வது போன்ற சம்பவங்கள் குறித்த செய்திகள் வருகின்றன.

குடிமக்களுக்கு அவர்கள் வீடுகளிலும், பணிபுரிந்த வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை போலீசாருக்கு இருக்கும்போது, ஒரு குடிமகன் காவல் நிலைய வளாகத்திற்குள் இறப்பது என்பது சர்ச்சைக்குரியதாகும். காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழப்பது, நீதியையே கேலிக்கூத்தாக்கிவிடும்.

ஒரு காலத்தில் போலீசார் மாவட்டங்களுக்கு இடையேயான குற்றவாளிகள் பற்றி கவலை கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது மாநிலங்களை தாண்டி, ஏன் சர்வதேச குற்றவாளிகள் மையப்பிரச்சனை ஆகிறார்கள்.

புதிய வகையான குற்றங்கள் தற்போது நிகழ்கின்றன. கடும் குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்வது மட்டும் போதாது, அவர்களை ஜாமீனில் விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். விரைவில் குற்றப்பத்திரிகை கொடுக்கப்படவேண்டும். மேலும் விசாரணையை விரைந்து முடிக்க செய்ய வேண்டும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x