Published : 26 Dec 2013 11:00 AM
Last Updated : 26 Dec 2013 11:00 AM

ஊழலுக்கு எதிரான கட்சி தமிழகத்திலும் உருவாக வேண்டும் - பழ. நெடுமாறன் விருப்பம்

ஆம் ஆத்மி கட்சி போல் தமிழகத்திலும் ஊழலுக்கு எதிரான கட்சி உருவாக வேண்டும் என்று, பழ.நெடுமாறன் விருப்பம் தெரிவித்தார்.

தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கத் தொடக்க விழா, திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்வியக்கத்தின் தலைவர் ஆ.கி.ஜோசப் கென்னடி தலைமை வகித்தார். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழர் பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தமிழர் பண்பாடு என்பது உலகளாவிய அளவில் பரந்து விரிந்துள்ளது. மொழி அழிந்தால் பண்பாடு அழியும், பண்பாடு அழிந்தால் மொழி அழியும்.

ஆடல் கலையை வடநாட்டினர் இறைவன் வடிவில்பார்க்கவில்லை. ஆனால், நாம் தான் நடராஜர் வடிவில் ஆடல் கலையை இறைவனாகப் பார்க்கிறோம்.

உலக படவிழாவில் தமிழ்ப் படங்களுக்குப் பரிசுகள் கிடைக்கவில்லை. ஆனால், கொரியா, வியட்நாம் படங்கள் பரிசு பெறுகின்றன. கொரிய திரைப்படத்தில் அவர்களுடைய கலாச்சாரம், பண்பாடு, இசை ஆகியவை பிரதிபலிக்கிறது. ஆனால், நம்முடைய படங்களில் நமது பண்பாட்டை எதிரொலிப்பதில்லை.

தமிழர்கள் இன்று அபாயத்தின் விளிம்பில் உள்ளனர். தமிழும் அபாயத்தின் விளிம்பில் உள்ளது. காப்பாற்ற வேண்டியது நம் எல்லோரின் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் பணநாயகம் தோற்று ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சியைப் போன்று, தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அந்த அணியை உருவாக்க நான் பாடுபடுவேன்" என்றார்.

முன்னதாக, குழந்தைகளுக்கு தமிழில் பெயர்களைச் சூட்ட வேண்டும், தமிழருக்கே உரிய பாரம்பரிய உடைகளை அணிவது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x