Published : 09 Dec 2013 01:59 PM
Last Updated : 09 Dec 2013 01:59 PM
டெல்லி தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் பண பலம், ஆட்சி, அதிகார பலம் மூலம் எத்தனையோ அச்சுறுத்தல்களைத் தந்தாலும், எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு போட்டியிட்டதாக, விஜயகாந்தின் தேமுதிக கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தமிழகத்தில் இருந்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் கட்சி என்பதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிரூபித்துள்ளது.
டெல்லி வாழ் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கவும், அவர்கள் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் ஏற்படுத்திடவும் தேமுதிக இந்தத் தேர்தலில் களம் இறங்கியது.
இந்தத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் பண பலம், ஆட்சி, அதிகார பலம் மூலம் எத்தனையோ அச்சுறுத்தல்களைத் தந்தாலும், பிரச்சினைகளை உருவாக்கி, தொடர்ந்து தொல்லைகள் தந்தாலும், எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு, இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் தேமுதிக தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
இத்தனை ஆண்டுகளும் பெரும் செல்வந்தர்கள் வேட்பாளர்களாக வலம் வரும்போது, தூரத்தில் இருந்து வேடிக்கைப் பார்ப்பதும், தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டுப் போடுவதையும் தவிர, எதையும் அறியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த நம் தமிழர்களுக்கு அவர்களும் தேர்தலில் போட்டியிடலாம், மற்றவர்களுக்கு இணையாக தாங்களும் வேட்பாளராக முடியும் என்பதையும் தேமுதிக நிரூபித்தது.
மேலும், டெல்லி வாழ் ஏழைத் தமிழர்களிடையே நம்பிக்கையையும், அசைக்க முடியாத தைரியத்தையும் தேமுதிக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் டெல்லி வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து, சம வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததன் மூலம் உலகத்தில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் தைரியம், நம்பிக்கை, நம்மாலும் முடியும் என்ற உறுதியை தேமுதிக விதையாக விதைத்து இருக்கிறது.
நல்லவர் லட்சியம், வெல்வது நிச்சயம் என்பதற்கு இணங்க, இந்த நம்பிக்கையே நாளை வெற்றியாக மாறி, நல்ல எதிர்காலத்தை நம் மக்களுக்கு உருவாக்க முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை கருத்தில்கொண்டு தேமுதிக என்றும் தன் ஜனநாயகக் கடமையாற்றும்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லியில் 11 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக மொத்தம் சுமார் 2,600 வாக்குகளே பெற்று, அனைத்திலும் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT