Published : 23 Sep 2013 02:48 PM
Last Updated : 23 Sep 2013 02:48 PM

தீபாவளிக்குக் கிளம்பிவிட்ட திகில் கொள்ளையர்கள்

'திருச்சி ராம்ஜி நகர்' - இந்தப் பெயரை கேட்டாலே வடநாட்டு போலீஸ் வட்டாரமே அலறும். காரணம் இங்குள்ள ராயல் கொள்ளையர்கள்! அசந்தால் ஆட்டையப் போடும் தங்களது நேர்த்தியான தொழில் திறமையால் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியையே அலறவைத்த இவர்கள், இப்போது தீபாவளி சம்பாத்தியத்துக்காக(!) ஆகஸ்ட் 22-ம் தேதியிலிருந்து கூட்டம் கூட்டமாக கிளம்பி இருக்கிறார்கள். ஒரேநேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் களத்துக்கு போயிருப்பதால் ஆண்கள் நடமாட்டம் அற்றுக் கிடக்கிறது ராம்ஜிநகர் கேப்மாரிகள் ஏரியா. இதனால் எந்த நேரத்தில் எந்த ஸ்டேட் போலீஸ் வந்து இம்சையை கொடுக்குமோ என்று திருச்சி போலீஸும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது!

யார் இந்த ராம்ஜிநகர் கொள்ளையர்கள்

ஆந்திராவில் 'கேப்மாரிகள்' என்றொரு இனம் உண்டு. நாடோடிகளான இவர்களின் குலத்தொழில் திருட்டு! சுதந்திரத்துக்கு முன்பு, இவர்களில் சிலர் தொழில் அபிவிருத்திக்காக(!) கரூர் அருகே இடையபட்டியில் வந்து ஜாகை போட்டார்கள். இவர்களின் களவுத் தொல்லை இடையபட்டி ஏரியா மக்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்ததால், எட்டுப்பட்டி பஞ்சாயத்து கூடியது. 'இனியும் இவங்கள இங்க விட்டு வைச்சா வீடுகள்ல வெஞ்சன கிண்ணியைக்கூட விட்டு வைக்கமாட்டாங்கப்பா.. அதுக்கு முந்தி நாமே இவங்கள இங்கிருந்து அடிச்சு வெரட்டிரணும்' என்று தீர்ப்பு வாசித்தது எட்டுப்பட்டி பஞ்சாயத்து.

மிரண்டு போன கேப்மாரிகள், 'ஐயாக்கமாரு அடிச்சு தொரத்தப் பாக்குறாங்க, நீங்கதான் எசமான் எங்களுக்கு ஒரு வழிய காட்டணும்' என்று திருச்சி மாவட்ட ஆட்சியரின் காலில் போய் விழுந்தார்கள். இரக்கப்பட்ட ஆட்சியர், இவர்களுக்காக திருச்சி திண்டுக்கல் சாலையில் ஆறாவது கிலோ மீட்டரில் குடும்பத்துக்கு ஐந்து சென்ட் நிலத்தை இனாமாகக் கொடுத்து குந்தவைத்தார். அப்போது அங்கே 'மூல்ஜி ராம்ஜி காட்டன் மில்ஸ்' என்றொரு மில் இருந்தது. கேப்மாரிகளுக்கு அந்த மில்லில் வேலையும் வாங்கிக் கொடுத்தார் ஆட்சியர். அன்றைக்கு கேப்மாரிகள் செட்டிலான ஏரியாதான் இப்போது ராம்ஜிநகர்!

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?

ராம்ஜி நகருக்கு வந்த பிறகும் குலத்தொழிலை விடவில்லை கேப்மாரிகள். அப்போதெல்லாம் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சர்வசாதாரணமாகப் போய்வர முடியும். இதை சாதகமாக்கிக் கொண்டு பினாங்கு, ரங்கூன் வரை சென்று கல்லாக் கட்டினர். வெளிநாட்டு சம்பாத்தியம்(?) இவர்களின் லைஃப் ஸ்டைலையே மாற்றியது. இவர்களின் வளமையைப் பார்த்துவிட்டு, உழைத்துச் கஞ்சிகுடித்த ஒருசிலரும் திருட்டுத் தொழிலுக்கு திசைமாறினர். அவர்களும் திரைகடலோடி திரவியம் தேட ஆரம்பித்தனர்!

ராம்ஜி நகர் கொள்ளையர்களின் தொழில் டெக்னிக்!

ஒருகட்டத்தில், வெளிநாடுகளுக்குப் போய் வருவதில் நடைமுறை சிக்கல்களும் கெடுபிடிகளும் அதிகரித்துப் போனதால் மீண்டும் சுதேசியாகி உள்நாட்டுக்குள்ளேயே உலைவைத்தார்கள். வீடு புகுந்து திருடுவதோ, பிறர் பார்த்துக் கொண்டிருக்கையில் பறித்துக் கொண்டு ஓடுவதோ கேப்மாரிகளின் ஸ்டைல் இல்லை. முழித்துக் கொண்டிருக்கும்போதே முழியைப் பறிப்பதுதான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி. வங்கிகளில் பணம் எடுத்து வருபவர்களை பின்தொடர்ந்து வந்து, அவர்கள் பார்வையில் படும்படி ரூபாய் நோட்டுகளை சிதறவிடுவர். கையில் லட்சங்களை வைத்திருக்கும் அந்த நபர், கீழே சிதறிக் கிடக்கும் சில நூறுகளுக்கு சபலப்படுவார். அந்த நொடிப்பொழுதில் அவர்களிடம் இருக்கும் லம்பான தொகையை ஆட்டையைப் போட்டு விடுவர். டிராஃபிக் சிக்னல்களில் கார்கள் நிற்கும்போது முன் சீட்டில் உள்ளவர்களிடம் ஒருவன் பேச்சு கொடுப்பான். இன்னொருவன் பின் சீட்டில் அவர்கள் வைத்திருக்கும் லேப்டாப், சூட்கேஸ் உள்ளிட்டவைகளை சுட்டுக்கொண்டு எஸ்கேப் ஆகி இருப்பான்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த இருபது பேர் ஒரு வங்கிக்குள் நுழைவார்கள். அதில் பதினெட்டு பேர் ஒரே நேரத்தில் அங்குள்ள கேஷியர் உள்ளிட்ட அத்தனை பேரிடமும் ஏதாவது சந்தேகம் கேட்டு அவர்களது கவனத்தை சிதறடிப்பார்கள். மீதி இரண்டு பேர் அந்த நேரம் பார்த்து கேஷ் கவுன்ட்டருக்குள் ஓசைப்படாமல் அடிபதித்து, கரன்ஸி கட்டுகளை பதுக்கிக் கொண்டு பஞ்சாய் பறந்து விடுவார்கள். வங்கிகளில் கேமராக்களை வைத்த பிறகு, அதன் கண்களுக்குப் பயந்து இப்போது இவர்கள் பெரும்பாலும் வங்கி வேலைக்கு(?) போவதில்லை.

திருடப் போவதற்கும் திசை பார்க்கிறார்கள்

சாதாரணமாக, நல்ல காரியத்துக்கு போனால்தான் சகுனம் பார்ப்பர். ஆனால், ராம்ஜிநகர் கேப்மாரீஸ், திருடப் போவதற்கே திசை பார்க்கிறார்கள். பஞ்சாங்கம் பார்த்து இந்த நாளில் இந்த திசை நோக்கி வல்லடைக்கு (அட.. திருடப் போறத இவங்க இப்படித்தாங்க சொல்றாங்க) போனால் அறுவடை அமோகமாக இருக்கும் என்பது இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. வேட்டைக்கு கிளம்பிவிட்டால் மூன்று மாதம் கழித்துத்தான் ஊர் திரும்புவர். ஆனால், வேட்டையில் சிக்கும் பணமும், பொருட்களும் ஏ.டி.எம்., மூலமாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலமாகவும் உடனுக்குடன் வீடு வந்து சேர்ந்துவிடும்.

தொழிலுக்கு கிளம்புவதற்கு முந்தைய நாள் அவரவருக்கு இஷ்டமான கோயில்களுக்கு சென்று 'தொட்டது துலங்க' வேண்டுதல் வைக்கிறார்கள். சகுன தடைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவர்கள் அதிகாலை நேரத்தில்தான் புறப்படுகிறார்கள். பெரும்பாலும் இருபது பேர் கொண்ட குழுவாகத்தான் கிளம்பும். இவர்களுக்கு அவசரத்துக்கு உதவுவதற்கு என்றே ராம்ஜிநகரில் சில அடகுக் கடைகள் இருக்கின்றன. வல்லடைக்கு புறப்படுகிறார்கள் என்றால் முந்தைய நாளே அதற்கான அறிகுறிகள் தெரிந்துவிடும். வழிச்செலவுக்கு பணம் புரட்டுவதற்காக அடகுக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.

அதிகாலை 4 மணிக்கு இங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் (இங்கிருந்து கிளம்பினால் போலீஸில் சிக்காமல் வளமாக வீடு திரும்பலாம் என்பது இவர்களின் சென்டிமென்ட்!) குடும்பத்தோடு கூடுகிறார்கள். பெண்கள் அனைவரும் தலைக்கு குளித்து, மஞ்சள் பூசி, தலை நிறைய பூ வைத்து, நெற்றி சிறக்க பொட்டிட்டு மங்களகரமாய் வருகிறார்கள். தொழிலுக்குப் போகும் ஆண்கள் தேவாலயத்துக்குள் சென்று வணங்கிவிட்டு, வெளியில் வந்து அன்றைய தினத்துக்கு அனுகூலமான திசையில் கொஞ்ச தூரம் நடக்கிறார்கள். அப்போது அந்த சுமங்கலி பெண்கள் அவர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களின் கைகளில் அன்றைய தினத்துக்கான பரிகாரப் பொருளாக, இனிப்பு, தண்ணீர், பால் இவற்றில் ஏதாவது ஒன்று இருக்கும். அவற்றை வாங்கி உண்டுவிட்டு பயணத்துக்கு தயாராவார்கள்.

இந்த வழியனுப்பு விழாவுக்கு கட்டுக்கழுத்திகள் (சுமங்கலிகள்) மட்டுமே வரவேண்டும் என்பது கேப்மாரிகளின் கட்டளை. ஊரின் எல்லையைக் கடப்பதற்குள் எதிரே ஒற்றை மாட்டு வண்டி வரக் கூடாது, யாரும் தும்மிவிடக் கூடாது, சிறு தூறல்கூட விழக்கூடாது, பாம்பு, பூனை குறுக்கே போகக் கூடாது, விதவைகள் எதிரே வரக் கூடாது இதில் ஒன்று நடந்தாலும் சகுனத் தடை; புரோகிராம் கேன்சல்!

வெற்றிப் பயணம் சிறக்க, வேண்டுதல் வைக்கும் மனைவிமார்கள்

கணவன்மார்களை வல்லடைக்கு வழியனுப்பிவிட்டு இல்லத்தரசிகள் கோயில் கோயிலாய் போய் வல்லடை சிறக்க வேண்டுதல் போடுவார்கள். இருபது பேர் வல்லடைக்கு கிளம்பினால் அதில் ஒரு “கேப்டன்” இருப்பான். வல்லடை முடிந்து வீடு திரும்பும்வரை அந்த கூட்டத்துக்கான அனைத்து செலவுகளும் மிஸ்டர் கேப்டன்தான். வல்லடையில் சிக்கும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கு லாபக் காசு. மூன்று மாதம் கழித்து வீடு திரும்பியதும் முனிக்கு கடாவெட்டி சாதி சனத்துக்கு விருந்து கொடுப்பதற்காக இதை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். எஞ்சியதில் தலைவருக்கு பத்து சதவீதம் போக மீதியை 19 பங்காக்கி மற்றவர்கள் பிரித்துக் கொள்வார்கள்.

போகிற போக்கில் இவர்கள் லட்சங்களை சுருட்டிவிடுவதால், தங்கள் வீட்டுப் பெண்களுக்கு கிலோ கணக்கில் நகை போட்டு சாரட் ஊர்வலம் வைத்து திருமணம் நடத்துகிறார்கள் ராம்ஜிநகர் கொள்ளையர்கள். இரண்டு நாட்கள் நடக்கும் திருமண கொண்டாட்டங்களால் ஊரே திமிலோகப்படும். இவர்களே உணராத சோகம் என்னவென்றால் வெளியிலிருந்து யாரும் இவர்களோடு சம்பந்தம் போட வருவதில்லை என்பதால் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே திருமணங்களை முடிக்கிறார்கள். இதனால், குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதும் அதிகரிக்கிறது.

ராம்ஜிநகர் டூட்டிக்கு போட்டிபோடும் போலீஸ்!

முன்பெல்லாம் ராம்ஜிநகர் கொள்ளையர்களைத் தேடி அடிக்கடி வரும் வடநாட்டுப் போலீஸார், உள்நாட்டுப் போலீஸை வைத்து கட்டைப் பஞ்சாயத்துப் பேசி, ஒன்றுக்கு பாதியை ரெக்கவரி பண்ணிக்கொண்டு போவார்கள். இந்த டீலிங் முடித்துக் கொடுத்தே கோடீஸ்வரர்களானவர்களும் உண்டு என்பதால் ராம்ஜிநகர் ஸ்டேஷனுக்கு வருவதற்கு இன்றைக்கும் திருச்சி போலீஸில் அடிதடியே நடக்கும்! ஆனால், அண்மைக்காலமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகர போலீஸ் அதிகாரிகளோடு நேரடியாக டீல் வைத்துக் கொண்டு அனைத்தையும் அங்கேயே 'சுமுகமாக' முடித்துவிடுவதாக சொல்கிறார்கள்.

திருத்த நினைத்த போலீஸ்; திருந்தாத கொள்ளையர்கள்

கேப்மாரிகளை ரூட் மாற்றுவதற்காக திருச்சி போலீஸும் சில முயற்சிகளை எடுத்தது. கலியமூர்த்தி எஸ்.பியாக இருந்தபோது, மறுவாழ்வு திட்டங்கள் என்ற பெயரில் கறவை மாடுகள் வாங்க வங்கிக் கடன்கள் உள்ளிட்டவைகளைப் பெற்றுத் தந்தது போலீஸ். காமதேனுக்களைப் பார்த்து பழகியவர்களுக்கு கறவை மாடுகள் எம்மாத்திரம்? அந்த மாடுகளையும் வந்த விலைக்கு விற்றுக் காசாக்கி அதையே மூலதனமாக்கி அடுத்ததாக கைவரிசைக் காட்டுவதற்கு கிளம்பி விட்டார்கள்.

அடித்தது 80 லட்சம்.. வந்தது 21 லட்சம்!

தீபாவளிக்கு தேட்டம் போடுவதற்காக ஆகஸ்ட் 22-ம் தேதி, முதல் “பேட்ச்” வல்லடைக்கு கிளம்பி இருக்கிறது. கடைசி “பேட்ச்” செப்டம்பர் முதல் தேதி புறப்பட்டிருக்கிறது. ஆயிரம் பேருக்கு மேல் களத்துக்குப் போயிருப்பதால் ஆண்கள் நடமாட்டமே அற்றுப்போய் கிடக்கிறது ராம்ஜி நகர்! இதனிடையே, ராம்ஜி நகரைச் சேர்ந்த லெட்சுமணனும் அவனது கூட்டாளிகளும் ராஜஸ்தானில் வங்கி ஒன்றிலிருந்து 50 லட்சத்தை தங்களது வழக்கமான பாணியில் லவட்டி விட்டார்கள்.

லெட்சுமணனைத் தேடிக்கொண்டு அண்மையில் திருச்சிக்கே வந்துவிட்டது ராஜஸ்தான் போலீஸ். லோக்கல் போலீஸ் டிமிக்கி காட்டியதால், 15 நாட்கள் முகாம் போட்டிருந்தார்கள். கடைசியில், உயரதிகாரிகளிடம் உட்கார்ந்து பேசிய பிறகே, எங்கிருந்தோ லெட்சுமணனைத் தூக்கிக்கொண்டு வந்த திருச்சி போலீஸார், அவனது வீட்டில் 21 லட்சம் மட்டுமே இருந்ததாக எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

மீதியை கேட்டதற்கு, 'செலவாகிப் போச்சுல்ல' என்று கூலாக சொன்னானாம் லெச்சு! வேறு வழியில்லாமல், வந்ததை வாங்கிக் கொண்டு ஆளையும் அரெஸ்ட் பண்ணிக்கொண்டு போயிருக்கிறது ராஜஸ்தான் போலீஸ்! 'ஒற்றை ஆளாக எப்படி இந்தக் காரியத்தைச் செய்யமுடியும்? என்று கேட்டால் போலீஸ் தரப்பில் மென்று முழுங்குகிறார்கள்.

''கொள்ளைக்காரர்களும் ரவுடிகளும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்'' - ஆட்சியைப் பிடித்ததும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இப்படிச் சொன்னார். ஆந்திராவிலிருந்து வந்து ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் கேப்மாரிகளின் ராம்ஜி நகர் முதலமைச்சரின் ஸ்ரீரங்கம் தொகுதியின் மையத்தில் இருக்கிறது என்பது உபரித் தகவல்!

''இன்னும் எவ்வளவு போலீஸ் வந்தாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவனுகளை திருத்தவே முடியாது" - திருச்சி போலீஸில் இருக்கும் நேர்மையான சில அதிகாரிகள் சொல்வதுதான் நிதர்சனமான உண்மை!

வடநாட்டில் திருட்டு; தமிழ்நாட்டில் முதலீடு

'ஆந்திர மாநிலத்திலிருந்து கரூருக்கு இடம்பெயர்ந்த இவர்கள் (கேப்மாரிகள்), பின்னர் அங்கிருந்து திருச்சி ராம்ஜி நகருக்கு குடிெபயர்ந்தனர். ராம்ஜி நகருக்கு வந்த பிறகும் குலத்தொழிலை விடவில்லை கேப்மாரிகள். அப்போதெல்லாம் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சர்வசாதாரணமாய் போய்வர முடியும். இதை சாதகமாக்கிக் கொண்டு பினாங்கு, ரங்கூன் வரை சென்று கல்லாக் கட்டினர். வெளிநாட்டு சம்பாத்தியம்(?) இவர்களின் லைஃப் ஸ்டைலையே மாற்றியது. இவர்களின் வளமையைப் பார்த்துவிட்டு, உழைத்துச் கஞ்சிகுடித்த ஒருசிலரும் திருட்டுத் தொழிலுக்கு திசைமாறினர். அவர்களும் திரைகடலோடி திரவியம் தேட ஆரம்பித்தனர்!’

போலீஸ் என்ன சொல்கிறது?

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சி ஜீயபுரம் டி.எஸ்.பி., அழகேசன், ''நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான். இவனுகளால திருச்சிக்கே கெட்ட பேரு. இவனுகள திருத்துறதுக்காக போலீஸ்ல எத்தனையோ முயற்சிகளை எடுத்துப் பாத்தாச்சு, எல்லாமே வீணாப் போச்சு. இவனுக ஜென்மத்துக்கு திருந்தமாட்டாங்க. இப்ப என்னடான்னா இவனுக டெல்லி போலீஸையே கைக்குள்ள போட்டுக் கிட்டதா சொல்றாங்க. இங்கே ஒருசில போலீஸ்காரங்க அவனுகளோட தொடர்புல இருக்கலாம். ஆனா, அதுக்காக ஒட்டுமொத்தமா எல்லா போலீஸையும் குத்தம் சொல்ல முடியாது. நம்ம மாநிலத்துக்குள் இவனுக பெருசா வாலாட்டுறதில்லைன்னாலும் இவனுகள இப்படியே வளரவிடுறது நல்லதில்லை. நாலு பயலுகள புடிச்சு கைய கால ஒடிச்சுவிட்டாத்தான் கொஞ்சமாச்சும் அடங்குவானுக" என்றார்.

காஸ்ட்லி பொருட்களை டெண்டர் எடுக்கும் சுப்பன் குடும்பம்

வல்லடையில் கிரெடிட், டெபிட் கார்டுகள் சிக்கினால் தாமதிக்காமல் அருகில் உள்ள ஷாப்பிங் மால்களில் புகுந்து காஸ்ட்லி அயிட்டங்களை பர்ச்சேஸ் பண்ணிவிடுவார்கள். லேப்டாப், நகைகள் சிக்கினால் உடனடியாக ராம்ஜிநகருக்கு போன் பறக்கும். இதற்காகவே காத்திருக்கும் சுப்பன், அடுத்த ஃப்ளைட்டில் புறப்பட்டு ஆன் தி ஸ்பாட்டில் இருப்பார். ராம்ஜிநகர் கொள்ளையர்கள் சுட்டுத்தள்ளும் காஸ்ட்லி பொருட்ளை சுப்பன்தான் ஒற்றைச் சாளர முறையில் டெண்டர் எடுப்பார். இவரைத் தவிர்த்து வேறு யாராவது களத்துக்கு வந்தால் போலீஸில் போட்டுக் கொடுத்துவிடுவார். சுப்பனுக்கு பதில் அவரது புத்திரசிகாமணிகள் இப்போது இந்த வேலையைச் செய்து் கொண்டிருக்கிறார்கள்.

'இன்ஃபோசிஸ்' நாராயணமூர்த்தியிடம் டெல்லியில் கைவரிசை

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது சென்னை மாநகராட்சி கருவூலத்திலிருந்த பணப் பெட்டியை தந்திரமாக சுட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள் ராம்ஜிநகர் ராக்ஸ்! பணம் போன ரூட்டை ஒருவழியாய் தேடிக் கண்டுபிடித்துவிட்ட சென்னை போலீஸார், அதை மீட்பதற்காக ஒரு மாத காலம் ராம்ஜிநகர் பள்ளிக்கூடத்தில் வந்து படுத்துக்கிடந்தார்களாம்! இதேபோல், 2005-ல் டெல்லியில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் சூட்கேஸ் ஒன்றை சுட்டுக் கொண்டு வந்து விட்டார்கள். லேப்டாப், கிரெடிட் கார்டு இவைகளோடு நாராயணமூர்த்தியின் க்ரீன் கார்டும் அதற்குள் இருந்திருக்கிறது. க்ரீன் கார்டு களவு போனதால் பதறிப்போன நாராயணமூர்த்தி, டெல்லி போலீஸில் புகார் கொடுத்தார்.

இது ராம்ஜிநகர் பார்ட்டிகளின் வேலைதான் என்று டெல்லி போலீஸார் தகவல் கொடுத்ததால், க்ரீன் கார்டை மீட்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார் நாராயணமூர்த்தி. இதையடுத்து, மிகப்பெரிய போலீஸ் படையே ராம்ஜிநகருக்குள் புகுந்து ரெய்டு நடத்தி, பொன்னும் பொருளுமாய் அள்ளிக் குவித்தது. இந்த ஆபரேஷனில் நிலைகுலைந்துபோன கேப்மாரிகள், இவன்தான் டெல்லியில் சூட்கேஸை சுட்டவன் என்று கந்தனை அடையாளம் காட்டினர். போலீஸ் 'கவனிப்பில்' அத்தனை பொருட்களையும் அச்சுக் குலையாமல் ஒப்படைத்தான் கந்தன், ஆனாலும், க்ரீன் கார்டு மட்டும் மிஸ்ஸிங்!. அதைக் கேட்டதற்கு, 'ஐயா.. அதை நான் டெல்லியிலயே டாய்லெட்டுக்குள்ள போட்டுட்டேனே’ என்று கூலாக சொன்னானாம். இப்போது, இன்னொரு ஆள்மாறாட்ட வழக்கில் புழல் சிறையில் இருக்கிறான் கந்தன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x