Published : 20 Jun 2017 12:03 PM
Last Updated : 20 Jun 2017 12:03 PM

மாட்டிறைச்சி விவகாரம்: ஸ்டாலின் தனித் தீர்மானம்; முதல்வர் பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி திமுக வெளிநடப்பு

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக தான் கொண்டுவந்த தனித் தீர்மானம் மீதான முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்.

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திமுக செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்ட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது அவர், கேரளா, புதுச்சேரி, மேகாலயா மாநிலங்கள் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. கேரளா, புதுச்சேரி வழியில் தமிழக சட்டப்பேரவையிலும் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் கோரினார்.

இதற்கு அவையில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் 40 ஆண்டு காலமாக அமலில் இருக்கிறது. இப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கில் தீர்ப்புக்கு பின்னரே முடிவு எட்டப்படும். மத்திய அரசின் தடை சட்டத்துக்கு தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது. மக்கள் கோரிக்கையை மதிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

ஆனால், தமிழக முதல்வர் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி திமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதற்கு தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபை தொடங்கிய நாளன்றே, நான் சபாநாயகர் அவர்களின் கடிதம் கொடுத்திருந்தேன். அதனடிப்படையில் இன்று சட்டமன்றத்தில் நான் எழுந்து, ”மாட்டிறைச்சிக்கு தடைச் சட்டத்துக்கு தடை கொண்டு வர தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்”, என்று பிரச்னை எழுப்பினேன்.

பக்கத்தில் உள்ள புதுவை மாநிலத்தில் அந்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று ஏகமனதாகத் தீர்மானம் போடுகிறார்கள். அதேபோல, கேரள மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போடுகிறார்கள். மேகாலயா மாநில சட்டமன்றத்தில் அதுபோல தீர்மானம் போடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, கோவா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி தான் நடைபெறுகிறது. பாஜகவை சேர்ந்தவர் தான் முதலமைச்சராகவும் இருக்கிறார். அந்த மாநிலத்தில் கூட, இந்தச் சட்டம் சரியான சட்டமல்ல, பல திருத்தங்களை கொண்டு வந்த பிறகுதான் இதை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி அங்கேயும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தநிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதிமுகவின் தோழமைக் கட்சிகளாக உள்ள ஓரிரு கட்சிகளும் இதை எதிர்த்துப் பேசி, அதன் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சொன்ன பிறகு, பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் இதுபற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல், ஏதோ ஒரு அறிக்கையைப் படித்துவிட்டு அமர்ந்து விட்டார்.

எனவே, நான் எழுந்து, "சட்டமன்றத்தில் இதுகுறித்துத் தீர்மானம் போடுவதற்குக் கூட இந்த அரசு தயங்குகிறது, இந்தச் சட்டம் பற்றி மக்கள் மன்றத்திலும், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட நேரத்திலும், ”இதை இன்னும் படிக்கவில்லை, அதை முழுமையாக படித்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும்", என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். சட்டமன்றத்திலாவது அதுபற்றி எதிர்த்து ஏதாவது பேச முற்படுவாரா? அதை கண்டிக்கின்ற வகையில் ஒரு வார்த்தையாவது சொல்வாரா? என்று காத்திருந்தோம். ஆனால், சட்டமன்றத்திலும் அதுபற்றி எதுவும் பேசாமல் அமர்ந்து விட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு நெருக்கடி நிலையை கொண்டு வந்தபோது, ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று அதனை எதிர்த்து நின்றது. ஆனால், இன்றைக்கு உள்ள ஆட்சியானது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் காலில் விழுந்து கிடக்கின்ற, பஜனை பாடுகின்ற, லாலி பாடுகின்ற, பிஜேபி ஆட்சி எதைக் கொண்டு வந்தாலும் அதற்கு அப்படியே அடிபணிந்து, பிஜேபியின் காலில் விழுந்து, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கின்ற ஒரு அரசாக இந்த அரசு இருந்து கொண்டுள்ளது என்பதற்கு, இன்றைக்கு சட்டமன்றத்தில் நடந்திருக்கின்ற நிகழ்ச்சி ஒரு சாட்சியாக, சான்றாக அமைந்துள்ளது.

வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள இந்த ஆட்சி பயந்து, அஞ்சி நடுங்கி, மத்திய அரசின் காலில் விழுந்து இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x