Published : 20 Jun 2017 11:57 AM
Last Updated : 20 Jun 2017 11:57 AM

ஆடுகளை காப்பாற்ற மேய்ச்சல் நிலம் தேடி சிவகங்கைக்கு செல்லும் ராமநாதபுரம் விவசாயிகள்

சிவகங்கை மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்ததால் கண்மாய், குளங்களில் சொற்பமாக நீர் சேகரமாகி உள்ளது. ஆங்காங்கே செடி, கொடிகள், புற்கள் துளிர்த்துள்ளன. இதனால் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ஆட்டு மந்தைகளை தண்ணீருக்காகவும், மேய்ச்சலுக்காகவும் சிவகங்கை மாவட்டத்துக்கு அழைத்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மாவட்டம் முழுவதும் பரவலாக ஐந்து நாட்கள் மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த மேய்ச்சல் நிலங்களில் புற்கள், செடி, கொடிகளில் இலைகள் துளிர்த்துள்ளன. கண்மாய்களில் குறைந்த அளவு நீர் சேகரமாகி உள்ளது. இதனை நம்பி, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆடுகளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்து வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே பெரிய பிச்சைப் பிள்ளையேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செம்மறியாடுகள் வளர்க்கும் விவசாயி முத்துச்செல்வம் (50), ‘தி இந்து’விடம் கூறியதாவது: விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் வெளிநாடுகளில் வேலை பார்த்தேன். வெளிநாடுகளில் சிரமப்படுவதை விட சொந்த ஊரிலேயே பிழைக்கலாம் என திரும்பி வந்து செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறேன். என்னிடம் சுமார் 100 ஆடுகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சியால் மேய்ச்சலுக்கு வழி இல்லை. மழையும் இல்லாததால் தீவனத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கால்நடைகளுக்குத் தேவையான புல், செடி, கொடிகள் வளர்ந் துள்ளன. இதனால் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்தோம். பக்கத்து ஊர்களை சேர்ந்த ஆறு பேர் சேர்ந்து கூட் டாக 800 ஆடுகளை கால்நடையாக மேய்த்து வருகிறோம். கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்கள் உள்ளதால் ஆடுகளை ஓட்டிச் செல்ல முடியாமல் சாலைகளில் அழைத்துச் செல்கிறோம். சாலையோர செடி, கொடிகளை மேயும் போது ஓய்வெடுத்துக் கொள்வோம். அருகே உள்ள மதுரை வரிச்சியூர் பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் செழித்திருப்பதாக கேள்விப்பட்டு இங்கிருந்து அங்கு செல்ல உள்ளோம்.

வறட்சியாக இருப்பதால் ஆட்டுக்கிடை போட விவசாயிகள் விரும்பவில்லை. ஏக்கருக்கு ரூ. 400 என குறைந்த விலைக்கு கிடை போடுகிறோம் என்றாலும் விவசாயிகள் முன் வருவதில்லை.

இதனால், கிடை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் வழியில்லை. ஆடு களையாவது காப்பாற்றும் நோக்கில் மேய்ச்சல் பகுதியையும், தண்ணீரையும் தேடி இப்படி நடந்து செல்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x