Published : 11 Nov 2014 03:15 PM
Last Updated : 11 Nov 2014 03:15 PM
தூத்துக்குடி துறைமுக கழக முன்னாள் தலைவர் சுப்பையாவுக்கு ரூ.7.5 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, சொத்துக்களை முடக்க சிபிஐக்கு தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
தூத்துக்குடி துறைமுக கழக தலைவராக இருந்த சுப்பையாவுக்கு ரூ.7.5 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் விவி மினரல்ஸ் பங்குதாரர் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் 'தி இந்து' செய்தியாளரிடம் கூறியதாவது:
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜன் தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். அணுஉலை, அணுஆயுத தயாரிப்புக்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோனோசைட்டில்தான் அணுகுண்டு தயாரிப்புக்கு பயன்படும் தோரியம் உள்ளது.
யுரேனியத்துக்கு மாற்று தோரியமாகும். தோரியத்தின் சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். இதனால் அரசுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் குற்றம் தேசத்துரோகமாகும். இருப்பினும் வைகுண்டராஜனை தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.
வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் தாது மணல் ஏற்றுமதி அனைத்தும் தூத்துக்குடி துறைமுகம் மூலமாகவே நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக தோரியம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு உதவி செய்ததற்கு கைமாறாக துறைமுக கழக தலைவராக இருந்த சுப்பையாவுக்கு ரூ.7.50 கோடியை வைகுண்டராஜன் லஞ்சமாக வழங்கியுள்ளார். வைகுண்டராஜனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்துள்ள நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக சிபிஐ அறிவிக்க வேண்டும். அவரைக் கைது செய்வதுடன், வைகுண்டராஜனின் சொத்துகளையும், அவரது நிறுவனங்களின் சொத்துகளையும் முடக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜன் நிகழ்த்திய அனைத்து குற்றங்கள் குறித்தும், தூத்துக்குடி துறைமுகக் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணியிலிருந்த அதிகாரிகளின் சொத்துகள், அவர்களுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள தொடர்பு, தாது மணல் அள்ளுவதற்கு தமிழக அரசு விதித்த தடை அமலில் இருக்கும் போதும், துறைமுக கழக அதிகாரிகளின் உதவியுடன் தாது மணல் ஏற்றுமதி நடைபெறுவது குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT