Published : 25 Nov 2013 08:40 AM
Last Updated : 25 Nov 2013 08:40 AM
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்க வேண்டும் என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்குமூலத்தை தான் மாற்றி அமைத்ததாக இந்த வழக்கைப் புலன்விசாரணை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர், 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்புதல் அளித்திருப்பதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது. சில குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறியாகும்.
எனவே, இனியாவது இதைப்பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டும். இத்தனை ஆண்டுகள் சிறையில் தன் இளம் பிராயத்தைச் செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்க வேண்டும். பயங்கரவாதிகள் பிடிபட உதவியவர்களுக்கு முதல்வர் நடத்திய பாராட்டு விழாவில், எத்தனை குழப்பங்கள்? கொலைக் குற்றவாளிகள், போலீஸ் பக்ருதீன் குழுவினரா? அல்லது ஏற்கெனவே டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவித்திருந்த நபர்களா? பக்ருதீன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்? கைது செய்த போலீஸ் அதிகாரி யார்? பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சந்தேகங்களைப் பற்றி அரசு ஏன் விளக்கமளிக்கவில்லை?.
தமிழக விவசாயிகளுக்கு நீரில் கரையும் உரங்கள் வழங்க, இந்த ஆண்டில், தமிழகத்துக்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரம் சப்ளை செய்ய நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் டெண்டர் கோரப்பட்டு, தொடர்ந்து நான்கு முறை சரியான காரணம் தெரியாமலேயே ரத்து செய்யப்பட்டன.
தற்போது, நவம்பர் 27ல் நான்கா வது முறையாக டெண்டர ்கோரப் போவதாக அறிவித்துள்ளனர். நான்காவது முறையாவது டெண்டர் உறுதி செய்யப்படுகிறதா என்று பார்ப்போம். ஆனால் இவர்கள் டெண்டர் உறுதி செய்வதற்குள், இந்த ஆண்டு வேளாண்மை முடிந்து விடும் என்கின்றனர் விவசாயிகள்.
அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் இருக்கிறதோ இல்லையோ, மின் உற்பத்தி பாதிப்பு என்ற செய்தி மட்டும் அன்றாடம் வந்து கொண்டிருக்கிறது. நடுநிலையில் சிந்திக்கக் கூடிய பலரும் இந்த அரசைக் கண்டித்து குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சட்ட மன்றத்தில் மின்துறை அமைச்சருக்குப் பதில் நீண்ட நேரம் பதிலளித்த முதல்வர், தமிழ்நாடு விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது தமிழ்நாட்டு ஏடுகளைப் புரட்டினால், தமிழ்நாடு மின் மிகை மாநிலமா? மின் பகை மாநிலமா? என்றுதான் சந்தேகம் வருகிறது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT