Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளும் கண்காணிப்பும் தீவிரமாகியுள்ளது.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க. வேட்பாளர் வெ.மாறன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாகச் சென்று தனித்தனியாக ஒவ்வொருவரையும் சந்தித்து வாக்கு சேகரிக்கின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த வியாழக்கிழமை சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். தொகுதிக்கு உட்பட்ட 9 இடங்களில் திறந்த ஜீப்பில் இருந்தபடி அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து பேசினார்.
இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் வெ.மாறனை ஆதரித்து அக்கட்சி நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை முதல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நான்கு நாட்கள் தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள், பணம் வழங்குவதை தடுக்க 33 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை நடந்த சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாகனத் தணிக்கையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வாழப்பாடி அருகே முதல்வர் சென்ற பிரச்சார வாகனத்தையும் அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கார், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். அதனை வீடியோவிலும் பதிவு செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்ட போலீசாருடன், 4 துணை ராணுவப் படையினர், 300 வீரர்களைக் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்காடு தொகுதியில் முகாமிட்டுள்ள வெளியூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் வரும் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஏற்காடு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்காடு தொகுதியிலுள்ள 290 வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப்-கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மின்வசதி இல்லாத சாவடிகளில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது.
பதற்றம் நிறைந்த கிராமங்களாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் படையை பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT