Published : 27 Nov 2013 10:41 AM
Last Updated : 27 Nov 2013 10:41 AM

நாட்டுவெடிகுண்டு வெடிப்பு: உதயகுமார் மீது வழக்கு இல்லை

இடிந்தகரை சுனாமி காலனி நாட்டுவெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக, அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் மீது வழக்கு இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

நாட்டுவெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக, எஸ்.பி. உதயகுமார், எம். புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று பிற்பகலில் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், சில மணி நேரங்களிலேயே, உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மீது எவ்வித வழக்குகளும் பதிவு செய்யவில்லை என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

அதேவேளையில், இடிந்தகரை சுனாமி காலனி குண்டுவெடிப்பு தொடர்பாக, கூடங்குளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குண்டு வெடிப்பில் சிக்கி இறந்த யாகப்பன், காயமடைந்து மருத்துவமனைகளில் உள்ள விஜயன், இயேசுமரிய சூசை ஆகிய 3 பேர் மீது வெடிகுண்டு மருந்து தடைச்சட்டத்திலும், கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல், வெடிப்பொருள் மூலம் வீடுகளை தகர்த்தல், விபத்தின்மூலம் மரணம் ஏற்படுத்துதல் என்று மேலும் 5 சட்டப் பிரிவின் கீழும் வழக்கு பதிந்துள்ளதாக கூடங்குளம் போலீசார் தெரிவித்தனர்.

இவர்களில், விஜயன் ஏற்கனவே, வெடிகுண்டு வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இவர்களுடன் பெயர் குறிப்பிடப்படாத வேறுசிலரும் இதில் தொடர்புடையவர்களாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களது பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

முன்னதாக, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் களமான இடிந்தகரை அருகே நேற்று இரவு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து வீடுகள் தரைமட்டமாயின. இதில், 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இடிந்தகரையில் போராட்டம் நடைபெற்றுவந்த அதே நேரத்தில், கூத்தன்குழி கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் இரு தரப்பு மீனவர்கள் மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால் ஒரு தரப்பினர் அங்கிருந்து வெளியேறி இடிந்தகரையிலுள்ள சுனாமி குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், அங்குள்ள வீட்டில் நேற்று இரவு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 2 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

வெடிகுண்டு பின்னணி

கூத்தன்குழி கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பலர் அங்கிருந்து வெளியேறினர். அவ்வாறு வெளியேறியவர்கள், தங்களை மீண்டும் குடியமர்த்த வலியுறுத்தி எஸ்.பி. விஜயேந்திர பிதரியிடம் மனுக்கள் அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கூத்தன்குழி மீனவர் கிராமத்துக்குள், 2 ஆண்டுகளுக்குப்பின் போலீசார் சென்று முகாமிட்டனர். அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணலுக்குள் நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அப்போது போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால் அவற்றை கைப்பற்றும் நடவடிக்கைகளில் போலீசார் உடனே இறங்கவில்லை.

சமாதான கூட்டத்தின்போது, வெடிகுண்டுகள், ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைப்பதாக கிராம பிரதிநிதிகள் உறுதி அளித்திருந்ததே இதற்கு காரணம். 2 கி.மீ. தூரத்தில் அணுமின் நிலையம் வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில்தான் அணுமின் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x