Published : 28 Oct 2013 09:52 AM Last Updated : 28 Oct 2013 09:52 AM
இறைவன் அனுப்பியதாக கூறி தம்பதியிடம் போலி சாமியார் பணம் சுருட்டல்
இறைவன் அனுப்பியதாக கூறி தம்பதியை ஏமாற்றி ரூ.51 ஆயிரம் வாங்கிச் சென்ற மோசடி சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அருகே கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (61). அவரது மனைவி கிருஷ்ணவேணி (56). கடந்த 22ம் தேதி அவர்கள் வீட்டு முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஐந்து பேருடன் இறங்கிய காவி உடை அணிந்த சாமியார் ஒருவர், கணபதியின் வீட்டிற்குள் வந்தார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற குருஜி சாமியார் என தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
கணபதி அவரை பயபக்தியுடன் வீட்டுக்குள் வரவேற்று அமர வைத்தார். பின்னர் சாமியார், "காளஹஸ்தி செல்லும் வழியில், தன்னுடைய மனக்கண்ணில் இறைவன் தோன்றி தன்னுடைய பக்தன் கணபதியின் குடும்பத்திற்கு ஆசி வழங்கிய பின், தன்னைக் காண வரும்படி உத்தரவிட்டான். அதனாலேயே நான் இங்கு வந்தேன்" என சாமியார் கூறினார்.
இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அவர்களிடம், காணிக்கையாக ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். மேலும் திருவண்ணாமலை கோவிலுக்கு செலுத்த வேண்டிய கடன் கணபதியின் குடும்பத்தாருக்கு உள்ளதாக கூறி ஒரு ஆயிரமும் மொத்தம் ரூ.51 ஆயிரத்துடன் சாமியார் விடைபெற்றார். காளஹஸ்தி சென்று விட்டு திரும்பும் போது பிரசாதத்துடன் வந்து பார்ப்பதாக கூறிச் சென்றார் சாமியார். அதன்பிறகு திரும்ப வரவேயில்லை.
பிரசாதம் வரும் என காத்திருந்து ஏமாற்றம் அடைந்த கணபதிக்கு பிறகுதான் வந்தவர் போலி சாமியார் என்பது தெரிந்தது. இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், பாதிரிவேடு போலீசார் வழக்குப் பதிந்து போலி சாமியாரை தேடி வருகின்றனர்.
WRITE A COMMENT