Published : 12 Dec 2013 09:33 AM
Last Updated : 12 Dec 2013 09:33 AM
தனது வீட்டை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக போலீஸில் பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென புகார் அளித்துள்ளார்.
தேமுதிக அவைத் தலைவராகவும், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், எம்.எல்.ஏ பதவியில் இருந்தும் செவ்வாய்க்கிழமை திடீரென ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆதரவாளர்களும், நண்பர்களும் அவரது வீட்டுக்கு சென்று பேசி வருகின்றனர். சென்னை கே.கே.நகர் 10-வது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு உள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை பண்ருட்டி ராமச்சந்திரனின் குடும்ப நண்பர் ஒருவர், அவரது வீட்டுக்கு வந்துள்ளார். டிரைவரை காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்தார்.
அப்போது, ஒரு காரில் 5 பேர் வந்து பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டை நோட்டமிட்டதாகவும், அவர்களில் ஒருவன், ‘‘இதுதான் பண்ருட்டி வீடு, இதைத்தான் அடித்து உடைக்க வேண்டும்’’ என்று மற்றவர்களிடம் கூறியதாகவும் நண்பரிடம் கார் டிரைவர் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த குடும்ப நண்பர், மீண்டும் வீட்டுக்குள் சென்று இதுபற்றி பண்ருட்டி ராமச்சந்திரனிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராமச்சந்திரன், நடந்த சம்பவங்களை கூறியிருக்கிறார். ஆய்வாளர் மதியழகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காரில் வந்து நோட்டமிட்ட மர்ம நபர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
மிரட்டலைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT