Published : 03 Nov 2013 01:08 AM
Last Updated : 03 Nov 2013 01:08 AM

தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை ஏற்காடு தேர்தலில் களமிறக்கத் திட்டம்: அ.தி.மு.க. அதிரடி வியூகம்

ஏற்காடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வாக்குகளை அள்ள, அந்தக் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பிரச்சாரத்தில் களமிறக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.



ஏற்காடு தொகுதியில் 1,16,958 ஆண் வாக்காளர்களும், 1,17,771 பெண் வாக்காளர்களும், திருநங்கை ஐந்து என மொத்தம் 2,34,734 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளரை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 10,000 பேர் கூடுதலாக உள்ள நிலையில், சரோஜாவுக்கு அனுதாபத்துடன் கூடுதல் ஓட்டு கிடைக்கும் என ஆளுங்கட்சி கணக்கு போட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகத்துக்கு கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என தி.மு.க. மேலிடம் அ.தி.மு.க. தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்ற எம்.பி. செல்வகணபதிக்கு தேர்தல் பணிக் குழுவில் முக்கிய பொறுப்பு கொடுத்துள்ளது.

இதனால், அ.தி.மு.க. தொண்டர்களின் ஓட்டுகளை கணிசமாக இழுக்க திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க. - தி.மு.க. இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தே.மு.தி.க., காங்., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் ஓட்டுக்களை பெறும் கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்பு சாதகமாக அமையக்கூடும்.

அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட வேண்டும் என அ.தி.மு.க திட்டமிட்டுள்ளதால், தே.மு.தி.க-வில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்ள ஆளுங்கட்சி தேர்தல் வியூகம் அமைத்துள்ளது.

தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மூலம் ஆளுங்கட்சியின் சாதனைகளை விளக்கினால் அந்தக் கட்சியினரின் ஓட்டுக்களை பெறலாம் எனக் கணக்கிட்டுள்ளது. அதேபோல பா.ம.க., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்களை வசப்படுத்தி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களைத் திருப்பி, ஓட்டுக்களை அள்ள திட்டமிட்டுள்ளது. 31 அமைச்சர்கள் உள்பட 52 பேர் கொண்ட அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு ஓட்டு வேட்டைக்கு தயாராகி வருகிறது.

அ.தி.மு.க.வுக்கு கெளரவ தேர்தல்...

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் களமிறங்கிய அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றது.

அ.தி.மு.க. மட்டும் 151 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க., 29 இடங்களைப் கைப்பற்றி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆளுங்கட்சியின் போக்கை விமர்சனம் செய்ய ஆரம்பித்த தே.மு.தி.க. கூட்டணியிலிருந்து வெளியேறியது. தே.மு.தி.க.வில் சலசலப்பு ஏற்படுத்தும் விதமாக அருண்பாண்டியன் உள்ளிட்ட ஏழு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் இடைத்தேர்தலை சந்திக்கும் அ.தி.மு.க.வுக்கு கெளரவத் தேர்தலாக அமைந்துள்ளது.

அதே நேரம் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. செல்வாக்கை நிலைநாட்டி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுய பலத்தை காட்டிட முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் கெளரவம் காப்பாற்றப்படுமா அல்லது தி.மு.க.வின் சுய பலம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x