Published : 26 Dec 2013 10:50 AM
Last Updated : 26 Dec 2013 10:50 AM

தமிழக - ஆந்திர மீனவர்கள் மோதலால் பழவேற்காட்டில் பதற்றம்: போலீஸ் குவிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சனிக்கிழமை அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பழவேற்காடு ஏரியை ஒட்டி உள்ள வேநாடு, காசாங்காடு குப்பம், திருவெங்கடநகர் குப்பம், பாலாஜி குப்பம் உள்ளிட்ட 11 மீனவ கிராமங்கள் ஆந்திர மீனவர் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க, தமிழக எல்லையில் உள்ள புதுக்குப்பம் அருகே ஏரியில் நடப்பட்டுள்ள பனைமரம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி திருவெங்கடநகர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், அந்த எல்லையை கடந்து மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, புதுக்குப்பம் மீனவர்கள் அவர்களை தாக்கி வலைகளை பறித்துச் சென்றனர். இதன் விளைவாக ஆந்திர மீனவர்களுக்கும் பழவேற்காடு ஏரி மீனவர்கள் ஐக்கிய சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை, பொன்னேரி கோட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ஆந்திர மீனவர் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதற்கிடையே, இரு மீனவ சங்கங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வசிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள், ஆந்திர மீனவர்களுக்கு ஆதரவாக சென்றனர். இதனால் ஒன்றுகூடிய சுமார் 2,500 மீனவர்கள், ஆந்திர தீவு பகுதியான வடகோடியில் ரகசிய கூட்டம் நடத்தினர்.

அமைதி பேச்சு

இதனால் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. எந்த நேரத்திலும் மோதல் நிகழலாம் என்ற நிலை உள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வரும் சனிக்கிழமை அமைதி பேச்சுவார்த்தைக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அப்துல் ரஹீம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x