Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM
திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாடு திருப்புமுனை மாநாடாக இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுகவினருக்கு சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் அவர் கூறி யிருப்பதாவது:
வரும் பிப்ரவரி 15, 16-ம் நாட்களில் திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் பிறந்த நாளைக் கொண்டாடியபோது அறிவித்தேன். 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திமுக தோன்றிய நாள்தொட்டு இதுவரை ஒன்பது மாநில மாநாடுகளை இந்த 64 ஆண்டுகளில் அகிலமே வியந்திடும் வண்ணம் நடத்தி முடித்திருக்கிறோம். திருச்சியில் நடைபெறவுள்ளது 10-வது மாநில மாநாடாகும். இந்த பத்து மாநில மாநாடுகளில் ஐந்து மாநில மாநாடுகள் திருச்சியில்தான். அது வும் திருச்சிக்கு ஒரு பெருமை தான்.
பொதுவாக, திமுக தலைவர் தான் மாநில மாநாட்டுக்கும் தலைவர். அந்த வகையில், இந்த பத்து மாநில மாநாடுகளில், ஆறு மாநில மாநாட்டுக்குத் தலைமை அடியேன்தான். அதுவும் எனக்கு சிறப்பு சேர்ப்பதுதானே? அண்ணா மூன்று மாநில மாநாடுகளுக்கும் நாவலர் ஒரு மாநாட்டுக்கும் தலைமை தாங்கியுள்ளனர்.
அண்ணா காலத்தில், தேர்தலில் திமுக போட்டியிடலாமா, வேண் டாமா? என்ற ஒரு கேள்வியை எழுப்பி, தேர்தலில் நிற்கலாமா, வேண்டாமா? என்று, மாநாட்டுப் பந்தலில் பெட்டிகளை வைத்து வாக்களிக்கச் செய்து, தேர்தலில் திமுக நிற்கலாம் என்ற ஜனநாயக ரீதியான முடிவு மேற்கொள்ளப்பட்டது திருச்சி மாநாட்டில்தான்.
மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதே திருச்சியில் திமுக மாநில மாநாட்டை நடத்த இருக்கிறோம்.
மாநாட்டுக்குப் புறப்பட இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இப்போதே பயண ஏற்பாட்டைத் தொடங்கிவிடு. வாகனங்களுக்கு முன்பணம் கொடுத்துவிடு. குடும்பத்தோடு மாநாட்டுக்கு வருவதுதானே நமது வழக்கம். அதற்கும் தகுந்தாற்போல சொல்லி வைத்துவிடு. திருச்சியில் மாநாடு என்றால் எப்போதும் அது திருப்புமுனை மாநாடுதான்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT