Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

பெண்கள் வங்கிக் கிளை சென்னையில் தொடக்கம் - சுய தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படும்

சென்னை அண்ணா சாலையில் பெண்கள் வங்கியின் கிளை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இதனை நிதித் துறையின் கூடுதல் செயலாளர் ஸ்நேகல தாஸ்ரீவத்ஸவா திறந்து வைத்தார். வங்கியின் உள்ளேயே ஏடிஎம் வசதியும் திறந்து வைக்கப்பட்டது.

பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கித் திட்டங்கள், சுய தொழில்களுக்கு, கல்விக்கு கடன்கள் கொடுப்பது உள்ளிட்ட அம்சங்களை கொண்டவையாக இந்த வங்கி இருக்கும். சமையலறைகளை மேம்படுத்தவும் கடன் தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வங்கியில் ஆண்கள் ஊழியர்களாகவும், வாடிக்கையாளர்களாகவும் இருக்கலாம்.

முதல்நாளில் தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டையிலிருந்து வந்திருந்த கண்மலை மகளிர் குழு, கடம்பச் சுடர் குழுவைச் சேர்ந்த தையல் தொழில், பூக்கடை, காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் உள்ளிட்டோருக்கு கடன் வழங்கப்பட்டது.

சென்னை கிளையின் மேலாளராக நிஜா சுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், “முதல் நாளில் இரு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம், ஒரு கல்லூரி மாணவிக்கும் ரூ.1.5 லட்சம், இரு சிறு தொழில் செய்பவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இங்கு சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் 4.5% ஆக இருக்கும்” என்றார்.

விழாவில் ஸ்நேகலதா ஸ்ரீவத்ஸவா பேசுகையில், “இந்தியாவில் 26% பெண்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்குகள் உள்ளன. பெண்களின் பொருளாதார முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கும் பெண்கள் சுதந்திரமாக முடிவுகள் எடுப்பதற்கும் அவசியமாகும்” என்றார்.

மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ரூ.1000 கோடியை பெண்கள் வங்கிக்காக ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி மும்பையில் இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதியன்று பெண்களுக்கான வங்கியை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அதே நாளன்று சென்னை, ஆமதாபாத், கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் 7 கிளைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

பாரதிய மஹிலா வங்கி என்று அழைக்கப்படும் இந்த வங்கிகளுக்கு எட்டு பெண்கள் கொண்ட நிர்வாக குழு உருவாக்கப்

பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. டெல்லியில் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கவிருப்பதால் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி திறப்பு விழா டெல்லியில் நடக்காமல் மும்பையில் நடைபெற்றது. இதற்கு நிர்வாக இயக்குநராக உஷா அனந்தசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 25 கிளைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரங்களில் உள்ள கிளைகளில் 8 பேரையும், கிராமப்புறங்களில் 4 பேரையும் பணியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x