Published : 01 Dec 2013 12:40 PM
Last Updated : 01 Dec 2013 12:40 PM

தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமானது சத்தியமங்கலம்

தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. வனத்துறைப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, நெல்லை மாவட்டம் களக்காடு -முண்டந்துறை ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தின் உத்தரவுப்படி, அதன் நெறி முறைகளைப் பின்பற்றி, இன்று முதல் (டிசம்பர் 1) சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அமல்படுத்தப்படுகிறது.

25 புலிகள்

சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனக்கோட்டமும், கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.

பொதுவாக புலிகள் தாங்கள் வாழும் பகுதிகளை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யக்கூடி யவை. அவை வாழும் பகுதியில், சூழல் சங்கிலி அறுபடாமல் இருக் கும் வனப்பகுதிகளாக இருக்கும். சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் புலிகள் வாழ்வதன் மூலம், வனவிலங்குகள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

வீரப்பன் காடு

இதுகுறித்து ‘ஓசை ’சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறியதாவது:

சந்தன வீரப்பன் இருக்கும் வரை, வீரப்பன் காடு என்று பெயர் பெற்றிருந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில், அவர் கொல்லப் பட்டதற்கு பின், 2007-ம் ஆண்டு, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த வனப்பகுதியில் எட்டு முதல் 12 புலிகள் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்.

துவக்கத்தில் இதனை யாரும் நம்பவில்லை. பின், வனப்பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆய்வு நடத்தியதில், 26 புலிகள் இருப் பது உறுதியானது. அதன் தொடர்ச்சியாக, சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டுள்ளது.

பணியாளர் பற்றாக்குறை

இது இயற்கை ஆர்வலர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி. இந்த வனப்பரப்பில், புலி, மான், கழுதைப்புலி ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் வாழக்கூடிய சிறப்பு பெற்றது. இரு மாநில எல்லையில் இருப்ப தாலும், கிழக்கு தொடர்ச்சி மலை யின் துவக்கமாக இருப்பதும் மற்றொரு சிறப்பு. அருகில் உள்ள பந்திப்பூர், முதுமலை சரணாலயங்களில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பெரிய வனப்பரப்பாக உள்ள சத்திய மங்கலம் காப்பகத்துக்கு புலிகள் இடம்பெயர வாய்ப்புள்ளது.

மாநில எல்லையில் இருப்ப தாலும், புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பாது காப்பை பலப்படுத்த வேண்டியது அவசியம். தற்போது இப்பகுதியில், 30 சதவீத பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை உடனடியாக நிரப்ப நட வடிக்கை தேவையாக உள்ளது என்றார்.

பணிகள் பிரிப்பு

புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப வனத்துறையில் பல்வேறு நிர்வாக மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, சத்தியமங்கலம் வனக்கோட்டமா னது மாவட்ட வனஅலுவலர் தலைமையில் செயல்பட்டு வந்தது. இனி, மாவட்ட வனஅலுவலர் நியமனம் இருக்காது. தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி இன்றுமுதல் சத்தியமங்கலம் வனக்கோட்டம் புலிகள் காப்பகமாக தகுதி உயர்வு பெறுகிறது. மேலும் புலிகள் காப்பகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக அமலுக்கு வருவதால், இனி கள இயக்குநர் தலைமையில் வனத்துறையினர் செயல்படுவர். மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர், இனி கள இயக்குநராகவும் மாவட்ட வனஅலுவலர்கள் துணை இயக்கு நர்களாகவும் செயல்படுவர்.

சத்தி வனக்கோட்டத்தில் சத்தி, பவானிசாகர், தாளவாடி, தூக்க நாயக்கன்பாளையம் ஆசனூர் என 5 வனச்சரகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது, பல்வேறு சரகங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து கேர்மாளம், தலமலை என மேலும் 2 வனச்சரகங்கள் உருவாக்கப்பட்டுள் ளன.

புலிகள் காப்பகம் அமலுக்கு வருவதால், சத்தி வனக்கோட்டம் 5 இல் இருந்து 7 சரகங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கென வனச்சரக அலுவலர்களும் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை ஆகிய வனச்சரகங்கள் சத்தியமங்கலம் துணைஇயக்குநர் கட்டுப்பாட்டிலும், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய வனச்சரகங்கள் ஆசனூர் துணை இயக்குநர் கட்டுப்பாட்டிலும் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x