Published : 01 May 2014 08:43 AM
Last Updated : 01 May 2014 08:43 AM

வையாவூர் காலனி பாதையை அடைக்க முயன்றதால் பரபரப்பு

வையாவூரில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த வழி திடீரென அடைக்கப்பட்டது. இதற்கு காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வையாவூரில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி இருபிரிவினரிடையே மோதல் வெடித்தது. காலனியை சேர்ந்த ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இருதரப்பிலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காலனி மக்களுக்கு பிரதான வழி இருந்தாலும் நீண்ட தூரம் சுற்றிச்செல்ல வேண்டும் என்பதால் ஆண்டாண்டு காலமாக குறுக்கு வழி ஒன்றை பயன்படுத்தி வந்தனர். அந்த பாதையின் நிலம் ஊர் பகுதியைச் சேர்ந்த வேதாசலம் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்நிலையில், இந்த வழியை காலனி மக்கள் பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கில் அந்த வழியை அடைக்குமாறு வேதாசலத்திடம் ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனராம்.

இதைத் தொடர்ந்து அவர் வழியை மறித்து தடுப்பு ஏற்படுத்தும் பணியில் புதன்கிழமை இறங்கினார். ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்துகொண்டிருந்ததை அறிந்த காலனி மக்கள் அங்கு திரண்டு, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் பாதையை அடைக்கக் கூடாது என்றனர். அதே சமயம் அங்கு திரண்ட ஊர் மக்கள், பாதையை அடைக்க வேண்டும் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் டி.எஸ்.பி பாலசந்திரன், வட்டாட்சியர் பானு ஆகியோர் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி மோதல் போக்கு நடக்காது என போலீஸார் உறுதியளித்ததன் பேரில் பாதை அடைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இரு தப்பினர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அமைதி கூட்டம் நடத்த இருப்பதாக வட்டாட்சியர் பானு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x