Published : 27 Nov 2013 08:43 AM
Last Updated : 27 Nov 2013 08:43 AM

சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரை மர்ம கும்பல் ஒன்று கோயில் அலுவலகத்திலேயே 3.9.2004 அன்று மாலை 5.45 மணிக்கு வெட்டிக் கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பியது. இதுதொடர்பாக கோயில் கணக்காளராக இருந்த கணேஷ், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மோகன்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே வழக்கின் போக்கை திசை திருப்புவதற்காக ஆறுமுகம், தில்பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண் உள்ளிட்ட 5 போலி குற்றவாளிகள் சரண் அடைந்தனர்.வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில் மாவட்ட எஸ்.பியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்ட பின் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியது.

இவ்வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், என்.சுந்தரேசன், கே.ரகு, கே.ஜி.கிருஷ்ணசாமி என்ற அப்பு, ரவி சுப்பிரமணியன் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறி விட்டார்.

இவர்களில் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் முக்கிய குற்றவாளிகள் என போலீசார் கூறியிருந்தனர். மொத்தம் 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய எஸ்.பி. பிரேம்குமார் வரதராஜபெருமாள் கோயில் மூலவர் பாதத்திலேயே குற்றப்பத்திரிகையை வைத்து காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. 370 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

அதன் பின் காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை தொடங்கவிருந்த நேரத்தில், தமிழக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது, வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும் என சங்கராச்சாரியார் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது.

இதையடுத்து சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை புதுவை மாநிலத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு வழக்குரைஞரும் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கதிரவன் என்பவர் சென்னையில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

கடந்த 28.10.2005-ல் இருந்து 8 ஆண்டுகளாக புதுவை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மொத்தம் 370 சாட்சிகளில் 187 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியன், சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி ஆகியோர் முக்கியமானவர்கள். சாட்சிளில் 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படுகிறது. புதுவை தலைமை நீதிபதி சிஎஸ்.முருகன் தீர்ப்பு வழங்குகிறார்.

சங்கரராமன் மகன் நம்பிக்கை

புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வரவுள்ள நிலையில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று சங்கரராமனின் மகன் ஆனந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சங்கர ராமனின் மகன் ஆனந்த் ஷர்மா கூறியதாவது: எங்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், நீதிபதி யின் மீதும் நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கில் 189 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் குறுக்கு விசாரணையில் 83 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும் 106 சாட்சிகள் உள்ளன. அதனால் தீர்ப்பு எங்களுக்கு சாதமாகத்தான் வரும் என்றார் அவர்.

சங்கரராமன் கொலை வழக்கு பின்னணி

இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறி இருந்ததாவது: சங்கர மடத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவேன் என சோமசேகரகனபாடிகள் என்ற பெயரில் பல்வேறு கடிதங்கள் மூலம் சங்கரராமன் மிரட்டி வந்தார். இதனால் ஜயேந்திரர், விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர், தாதா அப்பு, அவரது உதவியாளர் கதிரவன் ஆகியோர் உதவியுடன் சங்கரராமனை கொலை செய்ய சதித்தீட்டம் தீட்டினர்.

இதன் பேரில் அப்பு, கதிரவன் ஆகியோர் ரஜினி சின்னா, அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார், அனில்குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து சங்கரராமனை தீர்த்துக் கட்ட திட்டம் வகுத்தனர். இதன்படி 3.9.2004-ல் வரதராஜபெருமாள் கோயில் வளாகத்திலேயே மேலாளர் சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் ஒவ்வொரு குற்றவாளியாக மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர். ஜயேந்திரரை ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் வைத்து போலீசார் 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். இக்கைது சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இவ்வழக்கில் 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் ஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே நாளில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை போலீசார் கைது செய்தனர்.

பல்வேறு காரணங்களால் புதுவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக கடந்த 2008-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x