Published : 05 Nov 2013 10:29 AM Last Updated : 05 Nov 2013 10:29 AM
காமன்வெல்த் மாநாடு: பழ.நெடுமாறன் சீற்றம்
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர் உள்ளிட்ட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், "காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி பிரதமர் நல்ல முடிவு எடுப்பார். அவர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன்.
தமிழக மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார். இசைப்பிரியா தொடர்பான காட்சிகளை பார்க்கவே முடியாத அளவுக்கு பயங்கரமாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு மௌனம் சாதித்து வருகிறது. தமிழீழப் பெண் இசைப்பிரியாவின் கொடூர மரணம், கல் மனதையும் கரைய வைப்பதாக உள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. பிரதமரோ அல்லது இந்திய பிரதிநிதிகளோ மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 8-ம் தேதி சமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என கூறியுள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறும்போது, "இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது, தொப்புள் கொடி உறவுகளை அறுப்பது போன்றதாகும். தஞ்சையில் அமைக்கப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடக்கிறது" என்றார்.
திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், "மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனப்படுகொலைகள் புரிந்த இலங்கை அரசு நடத்தும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், 'காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா முடிவு எடுத்துள்ளதாக வரும் செய்திகள், இளைய சமூகத்தினரை வன்முறைப் பாதையில் திருப்புவதற்கான அடிப்படையாக அமைகின்றன. மத்திய காங்கிரஸ் அரசு, தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்தி வருகிறது' என தெரிவித்துள்ளார்.
WRITE A COMMENT