Published : 02 Oct 2013 06:22 PM Last Updated : 02 Oct 2013 06:22 PM
மதுரை: வாக்காளர் பட்டியலில் இதரர் - திருநங்கைகள் கொதிப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்காக வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர்கள் பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், இதரர் என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதற்கு திருநங்கைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு வேட்புமனு செய்திருந்த திருநங்கை பாரதிகண்ணம்மா கூறுகையில், "திருநங்கை என்று சொல்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் என்ன ஆடா? மாடா? இதரர் என்று அழைப்பதற்கு? ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினம் என்று சொல்வதே தவறு. அரசே எங்களை இப்படி நடத்தினால், மக்களை யார் திருத்த முடியும்? எனவே தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எங்கள் அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்" என்றார்.
"வாக்காளர் பட்டியலில் திருநங்கைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதே, இனியாவது அனைத்து திருநங்கைகளும் பட்டியலில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்களா?" என்று கேட்டோம்.
"கண்டிப்பாக. மதுரை மாவட்டத்தில் எனக்குத் தெரிந்து 1500 திருநங்கைகள் இருக்கிறார்கள். ஆனால், பட்டியலில் 55 திருநங்கைகளின் பெயர்கள் தான் உள்ளன. சென்னையில் 10 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். ஆனால், அங்குள்ள 16 தொகுதிகளையும் சேர்த்து 541 பேர் மட்டுமே பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இந்த சமூகம் தான் இதற்கெல்லாம் காரணம். உடன் பிறந்தவர்களின் எதிர்காலம் கருதி, பெரும் பாலானவர்கள் தங்களை திருநங்கைகள் என்று வெளியில் காட்டிக் கொள்வதில்லை. இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்கி அரசுதான் இந்தத் தயக்கத்தைப் போக்க வேண்டும்" என்றார்.
WRITE A COMMENT