Published : 01 Nov 2013 11:30 AM
Last Updated : 01 Nov 2013 11:30 AM
தமிழக மக்கள் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.
இந்த நன்னாளில் மக்கள், மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த தீப ஒளித் திருநாளில், மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துவதாக முதல்வர் தெரிவிதுள்ளார்.
ஆளுநர் தீபாவளி வாழ்த்து: தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீப ஒளி திருநாள், மக்களின் இதயங்களில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தி, அமைதியையும், வளர்ச்சியையும், வளத்தையும் கொடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT