Published : 03 Nov 2014 11:07 AM
Last Updated : 03 Nov 2014 11:07 AM

20 கி.மீ.க்கு ஒரு கடலோர காவல் நிலையம்: தமிழக கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்

தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக 20 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் கடலோர காவல் நிலையம் அமைக்கப்படுவதாக கடலோர காவல்படை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தமிழக அகதிகள் முகாம்களில் பல ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகளில் குடியேறுவதற்காக இடைத் தரகர்கள் மூலம் சட்ட விரோத கடல்வழிப் பயணம் மேற்கொள்கின்றனர். இதைத் தடுக்கவும், சட்டவிரோத கடல் வழிப் பயணத்தின் ஆபத்து களை உணர்த்தவும் தமிழக கடலோர காவல்படை சார்பில் தமிழகத்திலுள்ள அனைத்து அகதிகள் முகாமிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி மதுரை மாவட்டம் ஆனையூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலோர காவல்படை ஏடிஜிபி சைலேந்திர பாபு தலைமை வகித்து பேசிய தாவது:

ஆஸ்திரேலியாவில் குடியேற்றுவதாக சிலர் கூறும் ஆசை வார்த்தையை நம்பி இலங்கை மற்றும் தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து ஏராளமான அகதிகள் தப்பிச் செல்ல முயல்கின்றனர். இது ஆபத்தான பயணமாகும். நடுவழியில் பல காரணங்களால் கப்பலை இயக்கமுடியாத நிலை ஏற்படும்போது உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது. இவ்வாறு சென்று நடுக்கடலில் தவித்த தமிழக முகாம்களில் உள்ள 40 பேரையும், இலங்கையைச் சேர்ந்த 46 பேரையும் இதுவரை மீட்டுள்ளோம். எனவே இதுபோன்ற சட்ட விரோதமான, ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கடலோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்த கூடுதலாக 30 கடலோர காவல் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இவை செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் கடலோர பகுதிகளில் 20 கிலோ மீட்டருக்கு ஒரு கடலோர காவல் நிலையம் இருக்கும்’ என்றார்.

அப்போது அங்குள்ள அகதிகள் சார்பில் ஏடிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், 24 ஆண்டுகளாக முகாம்களில் தங்கியுள்ளோம். பர்மா அகதிகளுக்கு வழங்கியதுபோல் எங்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடாவுக்கு போகமாட்டோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக ஏடிஜிபி உறுதியளித்தார்.

அகதிகள் முகாமில் ஆய்வு

திண்டுக்கல் அருகே தோட்டா னூத்து இலங்கை அகதிகள் முகாமில் ஏடிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக யாரேனும் பணம் கேட்டால் தரவேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி வனிதா, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x