Published : 19 Nov 2013 12:29 PM
Last Updated : 19 Nov 2013 12:29 PM

கரும்பு கொள்முதல் விலையை ரூ.3,500 ஆக உயர்த்துக: ராமதாஸ்

நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கு குறைந்தது ரூ.3,500 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சர்க்கரை ஆலைகளில் நடப்புப் பருவத்திற்கான கரும்பு அரவைத் தொடங்கி விட்டது. ஆனால், கடந்த மாதமே அறிவிக்கப்பட வேண்டிய கரும்புக்கான குறைந்த பட்ச கொள்முதல் விலை இன்று வரை அறிவிக்கப்படவில்லை.

இதனால், தங்களின் கரும்புக்கான விலை என்ன? என்பது தெரியாமலேயே சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்க வேண்டிய நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மேலும், அண்டை மாநிலங்களில் கடந்த இரண்டாண்டுகளில் கரும்பு கொள்முதல் விலை 800 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.350 மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் கரும்பு இனிக்கும் போதிலும் அதற்கான கொள்முதல் விலை விவசாயிகளைப் பொறுத்தவரை மிகவும் கசப்பானதாகவே இருக்கிறது.

கரும்பு சாகுபடிக்குத் தேவையான உரங்களின் விலை கடந்த சில ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலியும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் கரும்பு சாகுபடிக்கான செலவு பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில் அதையெல்லாம் கருத்தில் கொண்டு கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

ஹரியானாவில் நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.3010 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாபில் டன்னுக்கு ரூ.2900 வழங்கப்படவிருக்கிறது.

கடந்த ஆண்டு ஒரு டன் கரும்புக்கு ரூ.2800 கொள்முதல் விலையாக வழங்கிய உத்தரப்பிரதேச அரசு நடப்பாண்டில் ரூ. 3200 வழங்க திட்டமிட்டிருக்கிறது. மத்திய அரசும் நடப்பாண்டில் கரும்புக்கான கொள்முதல் விலையை 23.5% உயர்த்தியிருக்கிறது.

இத்தகைய சூழலில் கரும்பு கொள்முதல் விலையை இந்த ஆண்டாவது தாராளமாக உயர்த்தித்தர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. எனவே, சாகுபடி செலவு அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கு குறைந்தது ரூ.3,500 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்; இதற்கான அறிவிப்பை உடனடியாக வழங்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான விலையை பல சர்க்கரை ஆலைகள் இன்னும் வழங்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.250 கோடிக்கும் அதிகமாக நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை வட்டியுடன் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவும், நடப்பாண்டில் கரும்பு வழங்கியதிலிருந்து 15 நாட்களுக்குள் அதற்கான தொகையை விவசாயிகளுக்கு வழங்கவும் ஆலை நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x