Published : 20 Oct 2013 10:04 AM
Last Updated : 20 Oct 2013 10:04 AM
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பலின் பொறியாளர் சனிக்கிழமை தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரும், கேப்டனும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களு டன் நுழைந்த அமெரிக்காவின் அட்வன் போர்ட் என்ற தனி யார் மெரைன் பாதுகாப்பு நிறு வனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் சிறைபிடித்து, தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி கப்பலில் இருந்த 35 பேரில், 8 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் என மொத்தம் 33 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
கேப்டன் கைது
கப்பலின் கேப்டனான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த டுட்னிக் வாலன்டைன், கப்பலின் பொறியாளரான அதே நாட்டை சேர்ந்த சிடரென்கோ வாலேரி ஆகிய இருவரை மட்டும் போலீஸார் கைது செய்யவில்லை. கப்பல் பராமரிப்பு பணிகளுக்கு தேவை எனக்கூறி, அவர்களை போலீஸார் கைது செய்யாமல் விட்டனர். பராமரிப்பு பணிக்கு கப்பல் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்ததும் அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் கப்ப லிலேயே இருந்தனர். கப்பலைச் சுற்றி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
பாஸ்போர்ட் பறிமுதல்
அமெரிக்க கப்பல் நிறுவனத்தின் ஏஜென்டான சாக்கோ தாமஸ், கடந்த சில நாட்களாக தூத்துக் குடியில் தங்கியிருந்து விசாரணைக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அவரது பாஸ்போர்ட்டை, கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கப்பல் நிறுவனம் சார்பில், மற்றொரு பிரதிநிதி தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்தார். மீண்டும் சோதனை இதற்கிடையே, தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, இந்த கப்பலில் சந்தேகமான பொருட்கள் எதுவும் உள்ளதா என கியூ பிரிவு போலீஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை மதியம் மீண்டும் தீவிரமாக சோதனை செய்தனர்.
கேப்டன் மற்றும் பொறியாளரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தற்கொலை முயற்சி கப்பலின் கீழ்தளத்துக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் கூறினர். அவர்களை கப்பலின் கேப்டன் டுட்னிக் வாலன்டென், கீழ்தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேல்தளத்தில் இருந்த பொறியாளர் சிடரென்கோ வாலேரி, திடீரென கப்பலின் கொடிமரத்தில் கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதைப் பார்த்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவரைக் காப்பாற்றி, உடனடியாக துறைமுக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்டது. அவர் நலமாக உள்ளார்.
தகவல் அறிந்ததும் கியூ பிரிவு உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்தனர். இவர்களை கப்பலில் தங்க அனுமதித்தால் நிலைமை விபரீதமாகிவிடும் எனக்கருதி கேப்டன் மற்றும் பொறியாளரை உடனடியாகக் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர், இருவரையும் முத்தை யாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இரவில் தூத்துக்குடி இரண்டாவது நீதித்துறை நடுவர் பொறுப்பு வகிக்கும் கதிரவன் வீட்டில் அவர்களை ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
டீசல் சப்ளை - விசாரணை
கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த சிலர், விசைப்படகு மூலம் 10 பேரல்களில் சட்டவிரோதமாக 1,500 லிட்டர் டீசலை கொண்டு சென்று, இக்கப்பலுக்கு கொடுத்துள்ளது தெரியவந்தது. முதல்கட்டமாக, தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த மரிய ஆண்டன் விஜய், திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு ஓட்டுநர் செல்லம், புரோக்கர் வெங்கடேசன் ஆகிய மூன்று பேரையும், கியூ பிரிவு போலீஸார் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.
தற்கொலை முயற்சி ஏன்?
கப்பலின் பொறியாளர் சிடரென்கோ வாலேரி தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றது நாடகம் என்றே போலீஸார் கருதுகின்றனர். கப்பல் பராமரிப்புப் பணி கடினமானது. கப்பலில் போலீஸார் தொடர்ந்து நடத்தும் சோதனை மற்றும் விசாரணையை எதிர்கொள்வது அதை விடக்கடினமானது. சனிக்கிழமை போலீஸாரின் விசாரணை சற்று கடினமாக இருந்துள்ளது. இதில் இருந்து தப்பிக்கும் எண்ணத்திலேயே, அவர் தற்கொலை நாடக மாடியுள்ளார் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT