Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM
மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய தொழில் நுட்ப உதவியுடன் சென்னை மாநகராட்சி புளியந்தோப்பில் அமைக்கப்பட்டு வரும் பயோ கேஸ் மின் உற்பத்தி நிலையத்தில், வரும் ஜனவரி 26-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியில் சேரும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க, அனைத்து மண்டலங்களிலும் பயோ கேஸ் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி, புளியந்தோப்பில் உள்ள ராயபுரம் மண்டல குப்பை மாற்று வளாகத்தில், மாதிரி திட்டமாக, ரூ.40 லட்சம் செலவில், 326 ச.மீ., பரப்பில் பயோ கேஸ் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய தொழில் நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியின் கட்டுமானப் பணியை, பாபா அணு ஆராய்ச்சி மைய தொழில் நுட்ப பிரிவு தலைவர் டாக்டர் எஸ்.பி. காலே, தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய் கிழமை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பிறகு, புளியந்தோப்பு பயோ கேஸ் மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக டாக்டர் எஸ்.பி. காலே மற்றும் டேனியல் செல்லப்பா ஆகியோர் தெரிவித்ததாவது:
குப்பையில்லா இந்தியாவை உருவாக்கவேண்டும் என்பது, பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்கு னர் சேகர் பாசுவின் விருப்பம். அதன்படி, எங்கள் மையம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உட்பட இந்தியாவில் 200 குப்பையிலிருந்து மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு பணியை மேற்கொண்டு வருகிறது. அதில், தற்போது 160 மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.
இரண்டு டன் உணவு, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட மக்கும் குப்பை கழிவுகள் மூலம், உற்பத்தியாகிற மீத்தேன் வாயு என்ற பயோ கேஸ் மூலம், மின் உற்பத்தி செய்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்க உள்ள புளியந்தோப்பு பயோ கேஸ் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணி, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
தற்போது அப்பணி, 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. 10 சதவீதப் பணி, இம்மாத இறுதியில் முடிந்துவிடும். அதன் பிறகு, எந்திரங்கள் நிறுவுதல், எலக்ட்ரிக்கல் பணி உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது. அப்பணி முடிவடைந்த பிறகு, வரும் ஜனவரி 26-ம் தேதி, மின் உற்பத்தி தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இந்த மின் உற்பத்தி நிலையம் மூலம் 100 முதல், 200 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி சமூக நலக்கூடங்கள், தனியார் திருமண மண்டபங்கள், உணவு விடுதிகளிலிருந்து, சேகரிக்கப்படும் காய்கறி, உணவு, இறைச்சி கழிவுகள் மூலம் புளியந்தோப்பு மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தெரு விளக்கு களுக்கு பயன்பட உள்ள தாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT