Last Updated : 18 Nov, 2013 12:00 AM

 

Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM

சிவகாசியில் தினசரி, மாத காலண்டர்கள் தயாரிப்புப் பணி மும்முரம்

அச்சுக்கலையில் சர்வதேசப் புகழ்பெற்ற சிவகாசியில் தினசரி, மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருவரின் வீட்டிலும், கடைகளிலும், தொழில் நிறுவனங்களிலும், அரசியல் கட்சி அலுவலகங்களிலும், அரசுத் துறை அலுவலகங்களிலும் என எந்த இடத்துக்குச் சென்றாலும் அங்கு நாள்காட்டிகள் இருப்பதைக் காணலாம்.

காலை எழுந்ததும் நாள், கிழமை, நல்ல நேரம் ஆகியவற்றைப் பார்க்கும் பழக்கமும், ராசி பலன் பார்க்கும் பழக்கமும் நம்மில் பலருக்கும் உண்டு. இத்தகைய நாள்காட்டிகள் தயாரிப்பில் தேசிய அளவில் விருதுகளைப் பெற்று புகழ் பெற்றுள்ளது சிவகாசி.

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாள்காட்டிகள் தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாள்காட்டியைத் தயாரிக்கும் பணியில் 20 பெரிய நிறுவனங்களும், அச்சுப்பதிப்பு, அட்டை தயாரிப்பு, வரைகலை, வடிவமைப்பு எனப் பகுதி பகுதியாக நாள்காட்டிகள் தயாரிக்கும் பணியில் 300-க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

இந்நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நாள்காட்டிகள் தயாரிப்பில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு புதுமை புகுத்தப்பட்டு வருவதே சிவகாசியில் உள்ள நாள்காட்டிகள் தயாரிப்பு நிறுவனங்களின் தனிச்சிறப்பு. அரை அங்குல உயரம், 2 அங்குல உயரம் முதல் 11 அங்குல உயரம், 14 அங்குல அகலம் வரையிலான விதவிதமான நாள்காட்டிகள் (கேக்) தயாரிக்கப்படுகின்றன.

இதில், பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட அன்றைய தினம் குறித்த அனைத்துத் தகவல்களும் அச்சடிக்கப்பட்டிருக்கும். இங்கு குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.500 வரையிலான நாள்காட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

ரூ.1000 கோடி வர்த்தகம்

நாள்காட்டிகள் தயாரிப்பு மூலம் சிவகாசியில் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. பொதுவாக ஆடிப்பெருக்கு தினத்தன்று நாள்காட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கப்படும். ஜனவரி 15-ம் தேதி வரை இப்பணி நடைபெறும்.

இருப்பினும், உற்பத்தி தொடங்கும் 3 மாதங்களுக்கு முன்பே பஞ்சாங்கப்படி ஒவ்வொரு நாளுக்கும் உரிய விவரங்களைச் சேகரித்தல், வடிவமைத்தல், புதிய வடிவங்கள் தயாரிப்பில் ஈடுபடுதல் என நாள்காட்டிகள் தயாரிப்புக்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிவகாசி பகுதியில் நாள்காட்டி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. காரணம், 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகளின் ஆர்டர்களும் இந்த ஆண்டு அதிக அளவில் குவிந்துள்ளன.

தேசிய விருது

இது குறித்து, சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற ஒரு நாள்காட்டி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஜெய்சங்கர் கூறியதாவது:

சிவகாசியில் தயாரிக்கப்படும் நாள்காட்டிகளுக்கு என்றுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதனால்தான் 3 மாதங்களுக்கு முன்பு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறந்த அச்சுக்கலைக்கான தேசிய விருது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் புதிய புதிய வடிவமைப்புகளில் நாள்காட்டிகளை தயாரித்துக் கொடுக்கிறோம். குறிப்பாக நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள்தான் அதிக ஆர்டர்கள் வழங்குகின்றன. அதைத்தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்கள், சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சியினர் நாள்காட்டிகளை வாங்கிச்செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பல்வேறு கட்சிகள் சார்பில் நாள்காட்டிகளுக்கான ஆர்டர் இந்த ஆண்டு ஏராளமாக வந்துள்ளது.

பணியாளர் பற்றாக்குறை

இந்த ஆண்டின் புதுமையாக ஜெயன்ட் எனப்படும் 11க்கு 14 அங்குலம் அளவில் பெரிய நாள்காட்டிகளைத் தயாரித்துள்ளோம். இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும், பணியாளர்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு, மூலப்பொருள்களின் விலை உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு போன்ற பல்வேறு காரணங்களால் முழு அளவில் உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x