Published : 01 Nov 2014 03:26 PM
Last Updated : 01 Nov 2014 03:26 PM

ஏ.டி.எம். சேவை புதிய கட்டுப்பாடுகளை ரத்து செய்க: ராமதாஸ்

ஏ.டி.எம். சேவையை பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை நீக்கி, ஏ.டி.எம். மையங்களில் எந்தவித தடையும் இல்லாமல், அனைத்து சேவைகளையும் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் வங்கிகளின் தானியங்கி பணப்பரிமாற்ற கருவியை(ஏ.டி.எம்) பயன்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் போதிய வசதிகளை செய்து தராமல், இத்தகைய கட்டுப்பாடுகளையும், கட்டணங்களையும் நடைமுறைப்படுத்துவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏ.டி.எம். சேவையை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்; இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது தான் இதுவரை இருந்த நடைமுறையாகும். அதுமட்டுமின்றி, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். சேவையை மாதத்திற்கு 5 முறை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

ஆனால், இந்த வழக்கத்திற்கெல்லாம் முடிவு கட்டிவிட்டு, ஏ.டி.எம் சேவைகளை பெற ஒவ்வொரு நிலையிலும் கட்டணம் வசூலிக்கும் முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 5 முறைக்கும் கூடுதலாகவோ அல்லது மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 3 முறைக்கும் கூடுதலாகவோ சேவை பெற்றால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்குவதன் நோக்கமே தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், தேவைக்கு ஏற்ப எடுத்து பயன்படுத்துவதற்கும் தான். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கட்டணமின்றி செய்து தர வேண்டியது வங்கிகளின் அடிப்படைக் கடமையாகும்.

இந்த சேவைகளை இலவசமாக வழங்குவதாக வங்கிகள் கூறினால், அது ஏமாற்று வேலை ஆகும். ஏனெனில், வங்கிகள் இலாபத்தில் இயங்குவதற்குக் காரணமே அவற்றில் வாடிக்கையாளர்கள் சேமித்து வைக்கும் பணம் தான். இந்தப் பணத்திற்கு ஆண்டுக்கு 4 % மட்டுமே வட்டி வழங்கும் வங்கிகள், அந்தப் பணத்தை மற்றவர்களுக்கு கடனாக வழங்கி 18% வரை வட்டி வசூலித்து லாபத்தைக் குவிக்கின்றன.

இதில் ஒரு சிறு பங்கை தான் வாடிக்கையாளர்களுக்கு காசோலை புத்தகங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் போன்றவற்றை இலவசமாக வழங்குவதற்காக செலவிடுகின்றன. எனவே,வாடிக்கையாளர்களிடமிருந்து ஏ.டி.எம் சேவை உட்பட எந்த ஒரு சேவைக்கும் கட்டணம் வசூலிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு எந்த உரிமையுமில்லை என்பது தான் உண்மையாகும்.

ஏ.டி.எம். மையங்களை நிர்வகிக்க அதிக செலவு ஆவதாக வங்கிகள் தரப்பில் கூறப்படுவதையும் ஏற்க முடியாது. உண்மையில் ஏ.டி.எம். மையங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டன என்பதைவிட வங்கிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டவை என்பது தான் பொருத்தமானதாக இருக்கும். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப புதிய கிளைகளை தொடங்குவதைத் தவிர்க்கவே ஏ.டி.எம். மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஒரு கிளையை திறந்து, நடத்துவதற்கான செலவில் 10 ஏ.டி.எம். மையங்களைத் திறந்து நடத்த முடியும். இதனால் வங்கிகளுக்கு பெருமளவு பணம் மிச்சமாகிறது. அதுமட்டுமின்றி, ஏ.டி.எம். சேவை வழங்குவதற்காக ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இதைக் கொண்டே ஏ.டி.எம். மையங்களின் செலவில் பெரும்பகுதியை ஈடு செய்ய முடியும்.

அவ்வாறு இருக்கும் போது, ஏ.டி.எம். சேவையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது முறையல்ல. இது வாடிக்கையாளருக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், வங்கிகளுக்கு நீண்டகால அடிப்படையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

ஏ.டி.எம். மையங்களில் அனுமதிக்கப்பட்ட தடவைகளுக்கு மேல் சேவை பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில் அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கிகளுக்கே நேரடியாக வந்து சேவை பெறத் தொடங்கினால், அதை வங்கிகளால் சமாளிக்க முடியாது.

அப்போது கூடுதலாக பல கிளைகளை தொடங்க வேண்டியிருக்கும். அதற்காக ஆகும் செலவுடன் ஒப்பிடும்போது ஏ.டி.எம். மையங்களுக்கான செலவு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, ஏ.டி.எம். சேவையை பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை நீக்கி, ஏ.டி.எம். மையங்களில் எந்தவித தடையும் இல்லாமல், அனைத்து சேவைகளையும் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x