Published : 23 Oct 2013 12:26 PM
Last Updated : 23 Oct 2013 12:26 PM
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களை வழங்கியும், மினி பஸ்கள் மற்றும் புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேருந்து சேவையை துவக்கி வைத்து முதலவர் ஜெயலலிதா பேசியது:
முந்தைய தி.மு.க. ஆட்சியின் நிதி நிர்வாக சீர்கேட்டினால், பல பேருந்துகள் இயக்க இயலாத நிலையில் இருந்தன. மொத்தத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்துக் கழகங்களை திறம்பட செயல்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி உதவி அளித்தல்,
புதிய பேருந்துகளை வாங்குதல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், போன்ற பல்வேறு ஆக்கப்பூர் வமான நடவடிக்கைகளை எடுத்தேன். தகுதியற்ற பேருந்துகளுக்கு மாற்றாக புதிதாக 1,026 கோடி ரூபாய் செலவில் 6000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 3,051 பேருந்துகள் வாங்கப்பட்டு தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல், அடிச்சட்டம் மற்றும் எஞ்சின் நல்ல நிலையில் உள்ள 483 பேருந்துகள் 34 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் பராமரிப்பிற்காக புதிதாக 68 பணிமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைதூர தடங்களுக்கு மின்னணுப் பயணச் சீட்டு முன் பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
16,661 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில் நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் 346 வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 9,157 பதிலி பணியாளர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விளம்பர வருவாய் ரூ.28 கோடி
பேருந்துகளில் விளம்பரம் செய்வதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 28 கோடியே 13 லட்சம் ரூபாய் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
இதே போன்று அஞ்சல் சேவைகளை அறிமுகப்படுத்தியதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 44 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது தவிர பயண வழி உணவகங்கள் மூலமாக 4 கோடியே 67 லட்சம் ரூபாய் வருமானத்தை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஈட்டியுள்ளன.
அதே சமயத்தில் டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் இருக்கும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த ஆண்டு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டிலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக செப்டம்பர் 2010 முதல் மார்ச் 2011 வரை ஓய்வு பெற்ற, 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக 47 கோடியே 71 லட்சம் ரூபாயும் ஏப்ரல் 2011 முதல் செப்டம்பர் 20 11 வரையிலான காலத்தில் ஓய்வுபெற்ற 2,337 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக 52 கோடியே 48 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4,653 ஓய்வூதியதாரர்களுக்கு 100 கோடியே 19 லட்சம் ரூபாய்க்கான ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகள்
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 610 புதிய பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 50 சிற்றுந்துகள் ஆகியவற்றை நான் இங்கே துவக்கி வைக்கிறேன்" என்றார் முதலவர் ஜெயலலிதா.
மினி பஸ் வழித்தடங்கள் விவரம்:
போரூர்-ராமாபுரம், பல்லாவரம்-திரிசூலம், குரோம்பேட்டை- மேடவாக்கம், குரோம்பேட்டை-மாடம்பாக்கம், கிண்டி-கீழ்கட்டளை, மூலக்கடை-மணலி, அசோக்பில்லர்-மேத்தாநகர், மாதவரம்-ரெட்டேரி, என்.ஜி.ஒ.காலனி-மேட்டுக்குப்பம் மற்றும் வடபழனி, கோயம்பேட்டிற்கும் மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT