Published : 25 Oct 2013 09:47 AM
Last Updated : 25 Oct 2013 09:47 AM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து கூடுதலாக 4,300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், முன்பதிவு செய்யாத பேருந்துகளில் இடம் பிடிக்க எந்த ஏற்பாடும் செய்ததாகத் தெரியவில்லை.
சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து கொள்ளும் வசதி தொலைதூரப் பேருந்துகளுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது. குறிப்பாக திருவண்ணா மலை, திண்டிவனம், காஞ்சிபுரம், ஆரணி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட குறுந்தொலைவு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யப்படுவதில்லை.
இதுதவிர, முன்பதிவு செய்து பயணம் செய்யும் வசதி நடுத்தர மக்களுக்கு மட்டுமே பயனளிக்கும். கட்டுமானத் தொழில் மற்றும் இதர கூலி வேலையில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படாது. அவர்கள் வழக்கம்போல பேருந்தில் இடம் பிடிப்பதற்காக முண்டியடிக்க வேண்டியதுதான்.
உதாரணமாக பண்டிகை மற்றும் முகூர்த்த காலங்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் பேருந்தில் இடம் பிடிப்பது குதிரை கொம்பாக உள்ளது. பலர் பேருந்துகள் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும்போதே தாம்பரம், கிண்டி, வடபழனி உள்ளிட்ட இடங்களிலேயே ஏறி இடம் பிடித்துக் கொள்கின்றனர்.
இதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் பயணம் செய்பவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இவர்களில் சிலர் விடிய விடிய காத்திருக்க வேண்டி இருக்கிறது.
இதுபோன்ற குளறுபடிகளுக்கு யார் மீது குற்றம் சாட்டுவது யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் பொதுமக்கள். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டோக்கன் முறை
ரயில்கள், பேருந்துகளில் முன்பதிவு வசதிகள் இருந்த போதிலும் பாமர மக்கள் இந்த வசதியைப் பயன்படுத் திக் கொள்வதில்லை. இதனால், ஏழை மக்கள் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக இங்கும் அங்கும் ஓடி அலைவதை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பார்க்க முடியும்.
பயணிகள் கூட்ட நெரிசல் அதிக மாக உள்ள காலங்களில் டோக்கன் முறையை அறிமுகம் செய்யலாம். அதாவது பயண நாளன்றே அப்போ தைக்கப்போது பேருந்து நிலவரத்துக் கேற்ப டோக்கன் வழங்கினால் முதியவர்கள், குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடியும். இருக்கைக்காக முண்டியடிக்க வேண்டிய பதற்றம் இருக்காது.
பல்வேறு இடங்களிலிருந்து இயக்கலாம்
வழக்கமாக இயக்கப்படும் பேருந்து களுடன் சிறப்புப் பேருந்துகளையும் கோயம்பேட்டிலிருந்து இயக்குவ தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர, மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் கோயம்பேடு வர வேண்டி உள்ளது. இதனால், கோயம் பேடு நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்து வெளியில் வருவதற்கே சுமார் 1 மணி நேரம் ஆகிறது.
தாம்பரம், அடையாறு, சோழிங்க நல்லூர், வேளச்சேரி, பாரிமுனை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதி களிலிருந்தும் பேருந்துகளை இயக்கி னால் இதுபோன்ற நெரிசலைத் தவிர்க்க முடியும்.
மாநகரப் பேருந்துகளை வெளியூருக்கு திருப்பி விடலாம்
சென்னையில் சுமார் 3500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையின்போது 200 மாநகர பேருந்துகள் வெளியூர்க ளுக்கு இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் வசிக்கும் 25 முதல் 30 விழுக்காடு மக்கள் தீபாவளிக்கு வெளியூர் செல்வதால் பேருந்து போக்குவரத்து பாதியாகக் குறைக்கப்படும்.
எனவே, சுமார் 1,000 முதல் 1,500 பேருந்துகளை வெளியூர்களுக்கு இயக்கினால் நெரிசலும் குறையும். மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT